திருப்பூர் பாஜக அலுவலகத்தில் ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வ 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பாஜக பிரமுகர் தலைமறைவு.
திருப்பூர் ஊத்துக்குளி சாலை மன்னரை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கருமாரம்பாளையம் பகுதியில் உள்ள ஆனந்த்குமார் என்பவருடைய
பாஜக கிளை அலுவலகத்தில் வைத்து கடந்த நான்காண்டுகளாக பொதுமக்களிடம் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். கட்சி அலுவலகத்தில் வைத்து சீட்டு நடத்தி வந்ததால் இவரை நம்பிய ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் இவரிடம் மாத ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு கட்டி வந்தனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களிடம் 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளார்.
தற்போது தீபாவளி சீட்டு முதிர்வடைந்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க வேண்டிய நிலையில் அலுவலகத்தை மூடிவிட்டு பாஜக அலுவலகத்தில் இருந்த கட்சி கொடி மற்றும் தலைவர்கள் புகைப்படங்களை கிழித்து அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார். தீபாவளி சீட்டுக்கான பொருட்கள் பெற வந்த பொதுமக்கள் அலுவலகம் மூடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரித்த போது செந்தில்குமார் சுமார் 3 கோடி ரூபாய் மக்கள் பணத்தை மோசடி செய்து சென்றது தெரியவந்தது இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்கள் செலுத்திய பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் மோசடி செய்த செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் திருப்பூர் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பொதுமக்களின் பணத்தை ஏமாற்றிய பாஜக பிரமுகர் செந்தில் குமார் மீது திருப்பூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே திருப்பூர் ஏலசீட்டு மோசடி செய்த நபர் பாஜகவை சேர்ந்தவர் இல்லை என பாஜக மாவட்ட தலைவர் செந்தில்வேல் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். ஆனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை தொடர்பான போஸ்டரில் செந்தில்குமார் புகைப்படம் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மோசடி செய்து தலைமுறை வாகி விட்டதால் கட்சிக்கு கெட்ட பேர் வந்து விடும் என பாஜக அவரை கை கழுவி விட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தலைமறைவான செந்தில்குமாரை கைது செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர்.