ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 17ஆம் தேதி சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவள்ளுர் மாவட்டம் எளாவூர் சோதனைச்சாவடி அருகே வாழைப்பழம் ஏற்றிச்சென்ற மினி வேனை, சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் அன்பரசி தலைமையிலான குழுவினர மறித்து சோதனையிட்டனர்.
அப்போது, மினிவேனில் 10 பார்சல்களில் சுமார் 100 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. அத்துடன் போலீசாரின் சோதனையில் வாகனத்தின் உள்ளே ரகசிய அறை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சோதனையிட்டபோது மேலும் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் ரூபாய் ஆகும். இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த மோகன்ராஜ், அவரது சகோதரர் பிரபு, பாலமுருகன் மற்றும் செந்தில்நாதன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மினி வேன் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.