பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் நியூசிலாந்துக்கு 107 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்கள் எடுத்தார்.
366 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய 4ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவித்தது. குறிப்பாக சர்பராஸ் கான் – ரிஷப் பண்ட் இணை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அபாரமாக ஆடிய சர்பராஸ் கான் 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 99 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை பறிகொடுக்க, இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 462 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
இதன் காரணமாக நியுசிலாந்துக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஒவரில் 4 பந்துகள் வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக 4ஆம் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. நாளை 5-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில் நியூசிலாந்து அணி 107 ரன்கள் எடுக்க வேண்டும்.