காரைக்குடியில் ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரிஜினல் நகைக்கு பதில் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் தனியார் வங்கியில் (ஐசிஐசிஐ) வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்துள்ளனர். அதில் ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைக்கு பதில் கவரிங் நகையை வைத்து மோசடி செய்த வங்கி மேலாளர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த தனியார் வங்கியில் ஆண்டு தோறும் ஆய்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வங்கியின் மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர். கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்த போது அந்த நகைகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது .
இதையடுத்து அந்த நகைகள் முழுமையாக பரிசோதணை செய்யப்பட்டன. வாடிக்கையாளர்கள் வைத்த தங்க நகைக்கு பதில் அந்த நகைகள் போலவே அச்சு அசலாக கவரிங் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நடைபெற்ற விசாரணையில் வங்கி மேலாளர் உள்ளிட்ட பணியாளர்கள் இந்த மேசாடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மொத்தம் 533 பவுன் நகைகள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 3லட்சத்து 86ஆயிரம் ஆகும். இதையடுத்து மண்டல மேலாளர் கிருஷ்ணக்குமார் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி கல்லல் வங்கி மேலாளர் பட்டுக்கோட்டையை அருகே கோட்டைக்குளம் மேலமேட்டை சேர்ந்த விக்னேஷ்(34), உதவி மேலாளர் காளையார்கோவில் அருகே புலிக்கண்மாயை சேர்ந்த ராஜாத்தி(39), மோசடிக்கு உதவி செய்த இதே ஊரைச்சேர்ந்த ரமேஷ்(38), சதீஷ்(21) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர்.