Homeசெய்திகள்கட்டுரைதவெக வின் முதல் அரசியல் மாநாடு; தடுமாறுகிறாரா தலைவர் விஜய்!

தவெக வின் முதல் அரசியல் மாநாடு; தடுமாறுகிறாரா தலைவர் விஜய்!

-

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில் அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் யாரும் இல்லாததால் சில விஷியங்களில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டுப் பணிகள் விழுப்புரம் அருகே விக்ரவாண்டியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்தது முதல் மாநாட்டிற்கான தேதி அறிவிப்பு வரை அனைத்து நடவடிக்கைகளும் அனுபவம் இல்லாமல் சினிமா பாணியில் நடைபெறுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

திரையுலகில் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கக் கூடிய முன்னணி நடிகர் விஜய். இவருக்கு நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். இந்த ரசிகர்களை மூலதனமாக வைத்து இயங்கிவந்த விஜய் ரசிகர் மன்றம் 2009ல் விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. அப்போது அதற்கென்று தனி கொடியையும் அறிமுகம் செய்தனர். அப்போதிலிருந்து ரத்ததானம் வழங்குவது, விஜய் பிறந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று மக்களிடம் நேரடியாக செல்ல தொடங்கினார்கள்.

2013ம் ஆண்டு “தலைவா” படம் திரைக்கு வந்ததில் இருந்து அரசியல் கலந்த கதைகளையும், கருத்துகளையும் அவ்வப்போது நடிகர் விஜய் பேசி வந்தார். அப்போது அவர் விரைவில் அரசியலுக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒரு வழியாக கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். தொடங்கினார் என்பதை விட அறிவித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். கட்சி பெயரில் வெற்றி “க்” கழகத்தில் ஏற்பட்ட எழுத்து பிழையை ஒருவாரம் கழித்து திருத்தினார். ஒரு கட்சியின் பெயரைக் கூட பிழை இல்லாமல் அறிவிக்க முடியாத அரசியல் அனுபவம் தான் அவருக்கு இருக்கிறது என்று அப்போது விமர்சனம் செய்தார்கள்.

பிப்ரவரி -2ம் தேதி கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய், அப்போது கொடியை தயார் செய்யவில்லை. கொள்கை என்னவென்றே சிந்திக்கவில்லை. அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து ஆகஸ்ட் 22ம் தேதி கொடியை அறிவித்தார். கட்சி கொடி அறிவிப்பிலும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது. கொடியில் “யானை” படம் இடம் பெற்றதற்கு பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு போடப்போவதாக அறிவித்துள்ளது.

கட்சி கொடி அறிவித்தபோது தவெக தலைவர் விஜய்- “இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி வரப்போகும் காலத்தில் நம் கட்சி ரீதியாக நம்மை தயார் படுத்திக் கொண்டு தமிழகத்திற்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம்” என்று முழக்கமிட்டார்.

சினிமா துறையில் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு, இந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க, நடிகர் விஜய் ஒப்பந்தம் ஆகியுள்ளார், அவருக்கு சம்பளம் இவ்வளவு என்று ஒரு நாள் செய்தி வரும். அதன் பின்னர் அந்த படத்தை இந்த டைரக்டர் இயக்கப்போவதாக ஒரு தகவல் செய்தியாக வரும். பிறகு இந்த இந்த நடிகைகள் அந்த நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் என்றும் பின்னர் படம் பூஜை ஒரு தேதி, ஆடியோ ரிலீஸ் ஒரு விழா ஒரு தேதி, கடைசியில் ஒரு வருடம் கழித்து அந்த படம் ரிலீஸ் ஆகும்.

அதே பாணியில் கட்சியின் பெயரை ஒரு தேதியில் அறிவித்தார். ஆறு மாதங்கள் கழித்து கட்சி கொடியை அறிமுகம் படுத்தினார். அக்டோபர் 27ல் கட்சியினுடைய முதல் அரசியல் மாநாட்டை நடத்தவுள்ளார். அந்த மாநாட்டில் தவெக வின் கொள்கைகளை அறிவிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் -27

அக்டோபர் 27ல் நடைபெற உள்ள தவெக மாநாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 85 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் மாநாட்டில் தொண்டர்கள் பயன்படுத்துவதற்காக 350 தற்காலிக கழிவறைகள் ஏற்பாடு செய்துள்ளனர். மாநாட்டில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் உடனுக்குடன் அறிந்துக் கொள்ள 500 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மாநாடு பந்தலுக்குள் செல்ல 5 வழித்தடங்களும், வெளியே வருவதற்கு 15 வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பெரும் பொருட்செலவில் மாநாட்டிற்கான வேலைகள் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் அரசியல் அனுபவம் வாய்ந்த கட்சிகள் பெரும்பாலும் செப்டம்பர் 15 தேதிக்கு மேல் ஜனவரி மாதம் வரை பெரிய அளவில் மக்கள் கூடுகிற மாநாடு, பொதுக்கூட்டம் எதுவும் நடத்த மாட்டார்கள். இந்த மூன்று மாதங்கள் பருவமழை பெய்கின்ற காலம் என்பதால் எச்சரிக்கையுடன் தான் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்வார்கள். ஆனால் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் -27ல் நடத்துகிறார்கள். மாநிலம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மாநாட்டை மழை காலத்தில் நடத்தலாமா? அக்டோபரில் நடத்துவதை விட ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முடிந்து நடத்தியிருந்தால் கூடுதல் சிறப்பை பெற்று இருக்கும்.

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு நாட்டை பிடிக்க வேண்டும், ஆள வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஒருவருக்கு முதலில் அவரை ஆளும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் களத்தில் அனுபவம் வாய்ந்த அடுத்தக்கட்ட தலைவர்கள் இல்லாமல் வெறும் புஸ்ஸி ஆனந்த் போன்ற இளம் ரசிகர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு கட்சியை வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்தி செல்வது சாத்தியமில்லாத பயணம். அதுவும் ஒரு சீசனுக்கு வந்து போகின்ற திரைப்படமாகவே இருக்கும்.

MUST READ