என்.கே.மூர்த்தி
ஒரு ஜனநாயக நாட்டில் வாக்குரிமை உள்ள யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கி அதிகாரத்திற்கு வரமுடியும் ஆனால் அதற்கு அடிப்படையில் சில தகுதிகள் வேண்டும் அல்லது வளர்த்துக் கொள்வதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் நான் ஆட்சிக்கு வந்தால் அதை மாற்றிவிடுவேன், இதை தூக்கி விடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். அவர் பேச்சை சில இளைஞர்கள் ரசிக்கிறார்கள். அந்த வெறும் பேச்சை மட்டும் வைத்து அவரால் ஒரு காலத்திலும் அதிகாரத்திற்கு வரமுடியாது என்பதை நாம் எல்லோரையும் விட அவர் நன்றாகவே அரிந்து வைத்திருக்கிறார் என்று கருதுகிறேன்.
உலக வரலாற்றில் பல்வேறு நிலைகளில் உள்ள தலைவர்களை, பெரும்பாலான சாதனையாளர்களை கூர்ந்து ஆய்வு செய்து கவனித்தால், அவர்களிடம் அபார விதமான சில பண்புகள் இருப்பதை பார்க்க முடியும். அந்த தலைவர்கள் அவர்கள் யார் என்பதை தெளிவாக அறிந்து வைத்திருப்பார்கள். அவர்களுடைய நம்பிக்கைகள், கொள்கைகள் எவை என்பதையும், எந்தெந்த இடத்தில் உறுதியுடன் இருக்கிறோம், இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து வைத்திருப்பார்கள்.
ஒருமுறை கலைஞர் கருணாநிதியிடம் நீங்கள் ஏன் இந்தியாவின் பிரதமராகக் கூடாது? அதற்கான முயற்சியில் இறங்க மறுப்பது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதற்கு கலைஞர் கருணாநிதி சொன்ன ஒரு வரி பதில் “நான் யார் என்பது எனக்கு தெரியும், அதேபோன்று என் உயரம் என்ன என்பதும் எனக்கு தெரியும்” என்று பதிலளித்தார். அந்த சூழலில் கர்னாடக மாநிலத்தை சேர்ந்த தேவுகவுடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு கலைஞர் கருணாநிதி தான் காரணமாக இருந்தார் என்று தேவுகவுடாவே பதிவு செய்திருக்கிறார்.
சீமான் போன்ற தலைவர்கள் தங்களுடைய இலக்குகள் குறித்தும், தங்களைப் பற்றியான முழுமையான மதிப்பீடுகள் குறித்தும், கொள்கைகள் பற்றிய நிலைப்பாட்டிலும் குழம்பிப்போய் இருக்கிறார்கள். அதனால் தற்போது அடைந்திருக்கும் நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கே அவர்கள் போராட வேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் எதை அடைய வேண்டுமானாலும் அடையலாம். அதற்கு நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களுடைய வெற்றியும் அமையும். நீங்கள் உள்ளே அகத்தளவில் என்ன கண்ணோட்டத்தில் இருக்கிறீர்களோ அப்படிப்பட்டவராக தான் ஆகமுடியும்.
சீமான் மனதில் வன்மம் தான் அதிகமாக இருக்கிறது. “ஒரு நாள் இந்த நாடு என்கையில் சிக்கினால்..” என்று பேசுகிறார். ஒரு வேளை அப்படி சிக்கினால் நாட்டு மக்களுக்கு நல்ல திட்டத்தை செய்வேன் என்று சொன்னால் ஏற்புடையதாக இருக்கும். அவர் பேசுவது முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரான பேச்சு.
வாயை திறந்தால் பொய்தான் பேசுகிறார். அவர் வெளியே பேசுகின்ற, செயல்படுகின்ற அனைத்தும் அவர் ஆழ்மனதில் பதிந்திருக்கும் காட்சிகள். இது ஒரு விதமான மனநோய் என்கிறார்கள் மனவியல் ஆய்வாளர்கள்.
ஒரு காலத்தில் வைகோ, பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, திருமாவளவன் போன்ற பெரும்பாலான தலைவர்கள் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்தார்கள். அந்த காலக்கட்டத்தில் பிரபாகரனுடன் நெருக்கமாக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல. அப்போது சீமான் அரசியல் ஆரம்பப் பள்ளியில் இருந்தார். ஆனால் அவருக்கு பிரபாகரனை எப்படியாவது சந்திக்க வேண்டும், அவரோடு பேசவேண்டும், பழக வேண்டும் என்ற விருப்பம், ஏக்கம் அவரிடம் இருந்தது. அந்த தொடர் முயற்சியினால் கொளத்தூர் மணி வாயிலாக மூன்று நிமிடம் மட்டுமே பிரபாகரனை சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றார். அதுதான் நடந்தது.
தற்போது அவர் பிரபாகரனுடன் அமர்ந்து கறி குழம்புடன் உணவு சாப்பிட்டேன், போர் பயிற்சி செய்தேன் போன்ற எண்ணற்ற கதைகளை சொல்கிறார். இவை அனைத்தும் பிரபாகரனை சந்தித்தால் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்கிற சீமானுக்குள் ஏற்பட்ட விருப்பங்கள், ஏக்கங்கள். அவை அனைத்தும் அவருடைய ஆழ்மனதில் காட்சியாக பதிவாகி விட்டது. தற்போது பிரபாகரன் உயிருடன் இல்லை என்றதும் அவருடைய ஆழ் மனதில் பதிந்த காட்சிகளை உண்மையை போல் விவரிக்கிறார். அதன் மூலம் அவரும் மகிழ்ச்சி அடைந்து அவருடைய தொண்டர்களையும் மகிழ வைக்கலாம். அது எதுவும் அவருடைய அரசியல் வெற்றிக்கு உதவாது.
“சொந்த மகிழ்ச்சியை அடைவதுதான் மனித வாழ்வின் உச்சக்கட்ட குறிக்கோள் அல்லது இலக்கு என்று அரிஸ்டாட்டில் கூறியுள்ளார்.” சொந்த நலனைவிட தேசத்தின் நலன் பெரியது, மக்கள் நலன் பெரியது என்று கருதுபவர்தான் தலைவராக முடியும்.
ஒரு தலைவர், தலைமைப் பண்பை நோக்கி செல்லக்கூடியவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டில் வாழும் விலங்கிடம் இருந்து கூட நாம் கற்றுக் கொள்ள முடியும்.
சிங்கத்தை காட்டுக்கு ராஜா என்று எல்லோரும் அழைக்கிறோம். ஏன் புலியை சொல்லவில்லை? உருவத்திலும், தோற்றத்திலும் பெரியதாக இருக்க கூடிய யானையை ஏன் காட்டிற்கு ராஜா என்று அழைக்க வில்லை. காட்டில் ஆயிரக் கணக்கான உயிரினங்கள் இருக்கிறது. ஆனால் சிங்கத்தை மட்டும் காட்டுக்கு ராஜா என்றும் அரசன் என்றும் அழைப்பதற்கு காரணம் என்ன? மற்ற விலங்குகளிடம் இல்லாத சிறப்பு, தலைமைப் பண்பு சிங்கத்திடம் என்ன இருக்கிறது.
சிங்கம் கூட்டமாக வாழக்கூடிய உயிரினம். சிங்கம் வேட்டைக்கு சென்று ஒரு மானை வேட்டையாடியது என்றால் அந்த உணவை மற்ற சிங்கங்கள் சாப்பிடுவதற்கு அனுமதிக்கும். மேலும், மீதி இருக்கும் உணவை நாளைக்கு தேவை என்று பதுக்கி வைக்கின்ற பழக்கம் சிங்கத்திடம் இல்லை. வயிறு நிறைந்ததும் ஒதுங்கி நின்று மற்ற விலங்குகளையும் சாப்பிடுவதற்கு அனுமதிக்கும். ஆனால், புலி தான் வேட்டையாடிய உணவை தான் மட்டுமே உண்ணுகின்ற சுயநலம் கொண்டது. தான் சாப்பிட்ட உணவில் மீதி இருந்தால் அதை நாளைக்கு வேண்டும் என்ற எண்ணத்தில் முள் புதரில் பதுக்கி வைத்துக் கொள்ளும்.
சிங்கமோ, நாளைக்கு தேவையானதை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம். இப்போது என் பசி தீர்ந்து விட்டது. மிச்சம் இருக்கும் இந்த உணவை மற்ற விலங்குகள் சாப்பிடட்டும் என்ற பெருந்தன்மை இயல்பாகவே இருக்கிறது. அதுதான் சிங்கத்தின் தனி சிறப்பு.
தன் தேவைக்கு போக மீதி இருப்பதை பகிர்ந்து கொடுக்கும் குணம் சிங்கத்திடம் இருக்கிறது. அதனால் அது வாழும் உலகத்தில் நிரந்தர அரசனாக இருக்கிறது.
பொது வாழ்க்கையில் தலைமை இடத்தை அடைந்தவர்களுக்கு சுயநலம் இருக்கக் கூடாது என்பதை சிங்கத்தின் வாழ்க்கை சொல்லி கொடுக்கிறது.
பணத்தின் மீதும், நிலத்தின் மீதும் ஆசை உள்ளவர்கள் தொழிலதிபர்களாக வரமுடியும், அதில் வளர்ச்சி அடைய முடியும். ஒருபோதும் பொது வாழ்க்கையில் தலைமை இடத்தை பிடிக்கவே முடியாது. தவறி பிடித்து விட்டாலும் அதை நிலை நிறுத்திக் கொள்ள முடியாது. உலக தொழிலதிபர்கள் நேரடியாக அரசியலில் அடியெடுத்து வைக்க மாட்டார்கள். அம்பானி, அதானியிடம் நாட்டையே விலைக்கு வாங்கும் அளவிற்கு பணம் இருக்கிறது. ஆனால் அவர்களால் நாட்டின் பிரதமராக வரமுடியாது.
உங்களுடைய எதிர்காலத்தில் தலைமை இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் சுயநலம் இல்லாத உங்கள் மனத்தீயில் உங்களை நீங்களே எரித்துக் கொள்வதற்கு தயாராக வேண்டும். எவரும் சாணியை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்வது இல்லை. சாணி சாம்பல் ஆனாதான் விபூதியாக மாறமுடியும். நீங்கள் முதலில் சாம்பலாக மாறுவதற்கு தயாராக இல்லை என்றால் தலைமை இடத்திற்கு வரவே முடியாது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் அகத்தளவில் என்னவாக இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பொறாமை உள்ளவராகவும், பேராசை கொண்டவராகவும், வன்முறை எண்ணத்தில் மூழ்கி போய் இருப்பவராகவும் இருந்துக் கொண்டு தலைவராக, தலைமை பண்பிற்கு வளரமுடியாது. நீண்ட நாட்களுக்கு தலைமை பீடத்தை அலங்கரிக்க முடியாது.
நீங்கள் உங்களைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். அது அருவருப்பாகவும் இருக்கலாம், அழகானதாகவும் இருக்கலாம். நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதை அப்படியே அறிந்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஒழுக்கத்தின் தொடக்கம். தலைமை பண்பிற்கு அடித்தளம். அங்கிருந்து உங்கள் பயணத்தை தொடங்குங்கள், அதுவே வெற்றியின் தொடக்கம்.