HomeBreaking News‘கோயில் ஒலிபெருக்கியால் பெருந்தொல்லை...’பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக வரிந்து கட்டும் இந்து அமைப்புகள்

‘கோயில் ஒலிபெருக்கியால் பெருந்தொல்லை…’பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக வரிந்து கட்டும் இந்து அமைப்புகள்

-

கோயில்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து மத்திய பிரதேசத்தில் மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின், கோயில்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி, ஒலி மாசு ஏற்படுத்துவதாக எழுதியுள்ளார். கடந்த வாரம் போபாலில் துர்கா சிலையை கரைக்கும் போது ஒலிபெருக்கியில் டிஜே இசைக்கு நடனமாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தார். ஒலி பெருக்கியின் அதிக சத்தத்தால் சிறுவன் மயக்கமடைந்து இறந்துவிட்டான். இந்தச் சம்பவம் ஒலிபெருக்கிகள் பற்றிய விவாதத்தைத் தூண்டியது. இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் கருத்துத் தெரிவித்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின், ‘‘கோவில்களால் ஒலி மாசு ஏற்படுகிறது. இதன் காரணமாக நீண்ட தூரம் வரை சத்தம் கேட்கும். இரவு வரை ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த விவகாரம் ஏன் புறக்கணிக்கப்படுகிறது?’’ எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ‘சம்ஸ்கிருதி பச்சாவ் மஞ்ச்’ என்ற வலதுசாரி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் திவாரி, ஐஏஎஸ் அதிகாரியை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த அவருக்கு உரிமை இல்லை என்றும் கூறினார். இதற்கிடையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் கூறுகையில், ‘‘ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின் சரியான கேள்வியை எழுப்பியுள்ளார். ஒலிப்பெருக்கிகளுக்கு எதிரான பாஜக அரசின் பக்கச்சார்பான நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது. மதத்தின் அடிப்படையில் ஒலிபெருக்கிகள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, அதை செய்யக்கூடாது’’ என ஆதரவு தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஐஏஎஸ் அதிகாரி..?
மத்திய பிரதேசத்தின் பிரபலமானவர் ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின். ஷைல்பாலா மார்ட்டின் சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர் என்கிற இமேஜ் சக அதிகாரிகள் மத்தியில் உள்ளது. அதே சமயம், சமூக பிரச்சனைகள் குறித்து அவர் கேள்வி கேட்கும் போது, ​​அது பற்றிய சர்ச்சையும் தொடங்குகிறது. கிறிஸ்தவ மத தலைவர்கள் முதல் கோவில்களில் ஒலிபெருக்கிகள் வரை அனைத்திலும் கேள்விகளை எழுப்பியுள்ளார் ஷைல்பாலா மார்ட்டின்.

ஷைல்பாலா மார்ட்டின் முன்பு மத்தியப் பிரதேச மாநிலப் பணியில் அதிகாரியாக இருந்தார். அவரது கூர்மையான இமேஜ் காரணமாக, அவர் 2009 ல் பதவி உயர்வு பெற்று இந்திய நிர்வாக சேவை அதிகாரியானார். ஷைல்பாலா மார்ட்டின் 2009 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மத்திய பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளார். தற்போது வல்லப பவனில் உள்ள பொது நிர்வாகத் துறையில் பணிபுரிகிறார்.

ஷைல்பாலா மார்ட்டினுக்கு மத்தியப் பிரதேசத்தில் தனி அடையாளம் உள்ளது. எல்லா சமூகப் பிரச்சினைகளையும் வெளிப்படையாகப் பேசுவார். ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின் 56 வயதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ராகேஷ் பதக் என்பவரை காதலித்தார். இதையடுத்து ஷைல்பாலா மார்ட்டின் தனது 57வது வயதில் திருமணம் செய்து கொண்டார். அப்போது ராகேஷ் பதக்கிற்கு 58 வயது. இப்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். இது ராகேஷ் பதக்கின் இரண்டாவது திருமணம். ஷைல்பாலா மார்ட்டின் 57 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.

ஷைல்பாலா மார்ட்டின் ஜாபுவாவைச் சேர்ந்தவர். அவர் ஏப்ரல் 9, 1965 இல் பிறந்தார். மத்தியப் பிரதேச அரசில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இதனுடன், நிவாரி மாவட்டத்தில் கலெக்டராகவும் இருந்துள்ளார். ஷைல்பாலா மார்ட்டின் இந்தூரில் உள்ள ஹோல்கர் அறிவியல் கல்லூரியில் படித்தவர். முதுகலையில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் வெளிப்படையாகப் பேசுவதில் பெயர் பெற்றவர். 2023ல், ஜபல்பூரில் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மீது சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து ஷைல்பாலா மார்ட்டின், ‘‘வெள்ளை அங்கி அணிந்த மதத் தலைவர்கள், தேவாலயத்தை கொள்ளையர்களின் மறைவிடமாக மாற்றியுள்ளனர். கிறிஸ்தவர்களே விழித்துக் கொள்ளுங்கள்! மதத்தின் பெயரால் வியாபாரம் செய்பவர்களை அடையாளம் காணுங்கள். இவர்கள் இயேசு கிறிஸ்துவின் பெயரில் கடைகளை நடத்தி வருகின்றனர்’’ எனத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கியவர்.

MUST READ