Homeசெய்திகள்அரசியல்அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி; முதல்கட்டமாக அமலாக்கத்துறை அனுப்பி சோதனை

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி; முதல்கட்டமாக அமலாக்கத்துறை அனுப்பி சோதனை

-

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி ; முதல்கட்டமாக அமலாக்கத்துறையை அனுப்பி சோதனை மேற்கொண்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான நண்பர்களின் வீடுகளிலும் , முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர். இந்த சோதனை என்பது கூட்டணிக்கு அதிமுகவை பணிய வைக்க நடைபெறுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைவர்களிடம் நெருக்கமாகவே இருந்து வந்தார். அதன்பின்னர் 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்தது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியே வெற்றிப் பெற்றது.

இந்த நிலையில் அதிமுக தோல்விக்கு முக்கிய காரணம் சிறுபான்மையினரின் வாக்குகள் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை திமுக கூட்டணிக்கு சென்றுவிட்டது. மீண்டும் சிறுபான்மை மக்களிடம் நன்மதிப்பை பெற வேண்டும் என்றால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைக்க வேண்டும். அப்போது தான் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க முடியும் என்பதை அதிமுக தலைமை உணரத்தொடங்கியது. அதனால் பாஜகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி கிடையாது என்று அதிமுக தலைமை அறிவித்தது. அதனை தொடர்ந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 25 சதவீதம் வாக்குகள் பெற்று அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. அதேபோன்று பாஜகவும் சில அமைப்புகளையும், கட்சிகளையும் ஒருங்கிணைத்து போட்டியிட்டது. அந்த கூட்டணி 15 சதவீதம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தது.

இந்த நிலையில் திமுக கூட்டணி உடையும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்த்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிப்பாக விலகும் என்று ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், திருமாவளவனும் தனித்தனியாக, உறுதியாக கூட்டணி உடையாது என்று தெளிவு படுத்திவிட்டனர். அதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று அதிமுக தலைமை விரும்பியது. அந்த முயற்சியும் முயற்சியாகவே இருக்கிறது. மேலும் சீமான் மீது அக்கட்சியினர் அதிருப்தி அடைந்து வருகின்றனர். அதனால் அதிமுக – நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு இல்லை.

அதிமுக – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக தலைமை முயற்சி செய்து வந்தது, அந்த முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வருகிறது. ஆனால் விஜய் முதல் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்ற முடிவில் உறுதியாக இருப்பதாகவும், அதிமுக தலைமை அனுப்பிய தூதுவர்களுடன் பேசுவதற்கு விஜய் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தமிழகத்தில் உள்ள எந்த கட்சிகளும் விரும்பவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. தமிழக அரசியல் களத்தில் அதிமுக தனித்து நிற்க வேண்டிய பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று பாஜகவின் நிலையும் படு மோசமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக- பாமக மற்றும் சில அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து 15 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றது. தற்போது அந்த வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டும். மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் போராடி ஆட்சியை பிடித்து விடலாம் என்று பாஜக கணக்குப் போட்டு வைத்துள்ளது. அதற்கு அதிமுகவுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தினால் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று உறுதியாக இருப்பார்.

மேலும் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக ஒதுக்கக் கூடிய சீட்டுகளை பாஜக – பாமக பெறவேண்டிய நிலை ஏற்படும். அதுபோன்ற பணிந்து சீட்டு வாங்கி வெற்றிப் பெறுவதை பாஜக விரும்பவில்லை. அதனால் அதிமுகவுடன் கூட்டணி வேண்டும், அது பாஜக இறங்கி போனதாக இருக்கக்கூடாது. அந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை பயந்து பாஜக-விடம் வரவேண்டும். அப்போதுதான் பாஜக தலைமை சொல்வதை கேட்டு நடந்துக் கொள்வார்கள்.

அதிமுகவை பணிய வைக்க அமலாக்கத்துறை சோதனை

நாங்கள் மீண்டும் பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டோம், அதிமுக தலைமையில் தான் 2026 ல் ஆட்சி அமைப்போம் என்று அடம்பிடித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவனின் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் திருச்சியில் இளங்கோவன் மகன் பிரவீன் குமார் தலைமையில் இயங்கிவரும் MIT நிர்வாகத்திலும் அமலாக்கத்துறை நுழைந்துள்ளது. அதேபோன்று கோவையில் இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான 1)ஆதித்தியா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட் (2) அருண் அஸ்வின் பேப்பர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் (3) ப்ளு மவுண்ட் பேப்பர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான ஒன்பது இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து விடுவார் என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது வைத்திலிங்கம் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முதல்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

MUST READ