spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

-

- Advertisement -
kadalkanni

சபாநாயகர் அப்பாவு-க்கு எதிராக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார். அவரது கருத்து அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞரணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு எம்.பி., – எம்எல்ஏ-களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

ஜூன் 12-ல் தமிழக சட்டசபை ஆய்வுக்கூட்டம்

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சபாநாயகர் அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக கூறியது தகவல் தானே தவிர அவதூறு அல்ல எனவும், சபாநாயகரின் பேச்சு அதிமுக, பாபு முருகவேலுக்கு எதிரானதல்ல எனவும் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் 40 எம்.எல்.ஏ.க்கள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும், அதற்கு அவர்களின் பெயரை சபாநாயகர் தனது பேச்சில் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், சம்பவம் நடந்தபோது, அதிமுக உறுப்பினராக இல்லாத புகார்தாரருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், பாதிக்கப்படாதவர் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

புகார்தாரர் பாபு முருகவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், புகார்தாரர் கட்சியில் சாதாரண உறுப்பினர் மட்டுமின்றி வழக்கறிஞர் அணி இணை செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பு வகிப்பதாகவும், அதனால் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய உரிமை உள்ளதாகவும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

செட்டில்மென்ட் ஆவணம் பதியமறுத்த பதிவாளர் ஆஜராக ஆணை

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த  உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சபாநாயகரின் பேச்சு தொடர்பாக கட்சி சார்பில் எந்த புகார் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தனிப்பட்ட முறையில் புகார்தாரர் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், மேலும் வழக்கை தாக்கல் செய்ய கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை என கூறி, சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், சபாநாயகர் பேச்சு வெளியான மறுநாள் அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் அமைச்சர் பதவிக்காக அப்பாவு இதுபோன்று பேசியிருக்கிறார் என்று கூறியிருக்கிறாரே தவிர கட்சிக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தெரிவிக்கவில்லை எனவும், ஜெயக்குமாரும் எந்த அவதூறு வழக்கையும் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார்.

MUST READ