துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக அண்மையில் குரல் எழுப்பிய நிலையில், தற்போது இந்த விவாகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார் என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
துணை முதல் அமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அப்போது அந்த பாடலில் வரிகள் மாற்றி பாடப்பட்டது. இதையடுத்து உதய நிதி ஸ்டாலின் மீண்டும் அந்த பாடலை பாடும்படி கூறினார். இதனை தொடர்ந்து மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இந்த நிலையில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக அரசின் விழாக்கள், துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த நிகழ்விலும் பாடப்பட்டது. அப்போது ஒரு கட்டத்தில் உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்களை மீண்டும் பாடுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் தமிழக அரசு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில்தான் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்த் தாய் வாழ்த்தை யாரும் தவறாக பாடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திடீரென மைக்கில் கோளாறு ஏற்பட்டு 2, 3 இடங்களில் அவர்கள் என்ன பாடுகிறார்கள் என யாருக்கும் கேட்காமல் போய்விட்டது. அதனால்தான் அவர்களை மீண்டும் முதலில் இருந்து பாட வைத்தோமே தவிர, அவர்கள் தவறாக பாடினார்கள் என்பதற்காக அல்ல என விளக்கி அந்த சர்ச்சைக்கு உதயநிதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அண்மையில்தான் ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தில் ஒரு வரியை தவிர்த்துவிட்டு பாடியது சர்ச்சையானது.