கொடைரோடு அருகே காரின் ஆவணத்தை கொண்டுவரச் சொன்ன போலீசார் தொண்டர்களை திரட்டிக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகியால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அழகம்பட்டி கிராமத்தில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்காக போலீசார் அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அம்மையநாயக்கனூர் போலீசார் இது தொடர்பாக அழகம்பட்டியில் விசாரணை மேற்கொண்டபோது, அங்கு தமிழக வெற்றி கழக கொடியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் குறித்தும் விசாரித்தனர்.
தொடர்ந்து, காரின் ஆவணங்களை காவல் நிலையம் கொண்டு வருமாறு அக்கட்சியின் நிர்வாகி அய்யனார் என்பவரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் போலீசார் கேட்ட ஆவணங்களை காவல் நிலையத்திற்கு தனியே எடுத்துவராமல் தமிழக வெற்றிக்கழக தொண்டர்களையும், அக்கட்சியின் நிர்வாகி அய்யனார் காவல் நிலையம் திரட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காரின் ஆவணத்தை பெற்றுக்கொண்ட போலீசார் த.வெ.க தொண்டர்களை கலைந்து போக செய்தனர்.
இதனிடையே, தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளதாக செய்திகள் பரவியதை தொடர்ந்து அதனை கட்சி நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுத்தனர். கட்சி நிர்வாகி காரின் ஆவணத்தை சரி பார்க்க விசாரணைக்கு அழைக்கப்பட்டதற்கே தொண்டர்களை திரட்டிக்கொண்டு கூட்டமாக வந்த த.வெ.க நிர்வாகியின் செயல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.