தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் என்றாலே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வேலை மற்றும் கல்விச் சூழல் காரணமாக வசித்து வரும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கடந்த அக்டோபர் 31ம் தேதி ( வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு மறுநாளான நவ.1 தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் அதற்கு அடுத்த 2 நாட்களான நேற்றும்(சனி), இன்றும்(ஞாயிறு) வார விடுமுறை நாட்கள் என்பதால், இந்த முறை தொடர்ந்து 4 நாட்கள் பண்டிகைக்கால விடுமுறை கிடைத்தது. இந்த 4 நாட்கள் விடுமுறையை கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்தனர்.
சொந்த ஊர்களுக்குச் சென்ற் மொத்த மக்களும் இன்று ஒரே நாளில் சென்னைக்கு திரும்புவதால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில், தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னைக்கு படையெடுத்து வருகின்றன. இதனால் சுங்கச்சாவடியில் கூடுதல் கவுண்டர்களை திறந்து இலவச அனுமதி மூலம் வாகனங்களை அனுமதித்து வருகின்றனர்.
இருப்பினும் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் 10 முதல் 20 கிலோமீட்டர் வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழுப்பேட்டில் இருந்து செங்கல்பட்டு வரை சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த நெரிசலானது காணப்படுகிறது.