Homeசெய்திகள்இந்தியா‘உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன்’ - பவன் கல்யாண் பரபரப்பு பேச்சு..!!

‘உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன்’ – பவன் கல்யாண் பரபரப்பு பேச்சு..!!

-

 ‘உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன்’ -  பவன் கல்யாண் பரபரப்பு பேச்சு..!!

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உள்துறை அமைச்சர் பதவியும் நானே ஏற்பேன் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில துணை முதல்வரும், பஞ்சாயத்து ராஜ், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ள பவன் கல்யாண், தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வைத்தார். அப்போது விழாவில் பேசிய பவன் கல்யாண், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி பெற முடியும். எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. போலீசார் குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ளனர். ஜாதி, மதம் குற்றவாளிகளுக்கு கிடையாது. தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும். உறவினர் என்றும் ரத்த பந்தம் எனன்றும் கூறி வந்தால், தவறு செய்திருந்தால் அவர்களையும் சேர்த்து அடித்து உதையுங்கள். டிஜிபி, எஸ்.பி., கலெக்டர்களுக்கு கூறுகிறேன் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்.

  பவன் கல்யாண்!

இன்னும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதிகாரிகள் மத்தியில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. உள்துறை அமைச்சராக உள்ள அனிதாவும் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல் அமைதியாக உள்ளார். நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்றால் வேறு மாதிரி இருக்கும். என்னை அந்த நிலைக்கு கொண்டு வர வேண்டாம். தேவைப்பட்டால் உள்துறை அமைச்சர் பொறுப்பையும் நானே ஏற்பேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்க வேண்டும். சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிராக செயல்பட்டால் எவ்வாறு தண்டனை வழங்கப்படுகிறது அது போன்று அளித்தால் என்ன தவறு உள்ளது. நான் உள்துறை அமைச்சரானால் உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் செய்வது போன்று செய்தால்தான் நன்றாக இருக்கும். எதிர்க்கட்சியாக இருந்தபோது இதே போலீசார் என்னை கைது செய்ய வந்தனர். ஆனால் இப்பொழுது ஏன் பணி செய்யவில்லை என்று தெரியவில்லை. அதே போலீசாரே இருக்கிறீர்கள்.

எனக்கு துணை முதல்வர் பதவி, ஆட்சி அதிகாரம் முக்கியமல்ல எப்பொழுதும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே முக்கியம். சமூக நலத்துறை விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு அங்குள்ள அதிகாரிகளால் தொடர்ந்து பாலியல் சீண்டல் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளது. ஏன் ஒரு முறையாவது எம்.எல்.ஏக்கள் சென்று பார்த்தீர்களா? ஜனசேனா கட்சியினரும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட்டோம் என்று அமைதியாக இருக்கக் கூடாது. எம்எல்ஏக்கள் அனைவரும் மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாஜக, தெலுங்கு, தேசம் ஜனசேனா கூட்டணியை யாரும் உடைக்க முடியாது. தனிப்பட்ட ஒருவர் செய்யும் தவறை ஜாதியாலோ மதத்தாலோ இணைக்க வேண்டாம். தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும்” என்று அதிரடியாக பேசிய அவர் போலீசாருக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

MUST READ