விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆற்று பாலத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் காயம் அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகலாதன். திருவண்ணாமலையில் நடைபெற்ற இவரது மகளின் வளைகாப்பு நிகழ்வுக்கு, பிரகலாதன் மற்றும் குடும்பத்தினர் தனியார் பேருந்து மூலம் சென்றிருந்தனர். பின்னர் அனைவரும் திண்டிவனத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். செஞ்சி அடுத்த வல்லம் தொண்டி ஆற்று பாலம் பகுதியில் சென்றபோது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றுப்பாலத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.