கம்பத்தில் கருப்பு திராட்சை விவசாயம் தீவிரம்
கம்பம் பள்ளத்தாக்கில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு, அங்கு ஒயின் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளைம், காமய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், அதனை சார்ந்த பணிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோடை காலங்களிலும், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் திராட்சைக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மழை மற்றும் பனி காலத்தில் திராட்சைகள் அழுகி வீணாகிவிடும் என்றும், இதனால் பெருமளவு பாதிப்பு ஏற்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரும்பு, நெல், உள்ளிட்டவை போல திராட்சைக்கும் அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவற்றுக்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.