சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர்கள் அரவிந்த் சிதம்பரம், பிரணவ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2-வது சென்னை
கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. இதில், 7 சுற்றுகள் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார். இதேபோல், சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் பட்டம் வென்று அசத்தினார். இந்த நிலையில், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரம், பிரணவ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், தனது வியூகப்
புத்திசாலித்தனத்தை இறுதிச்சுற்றில் தீர்க்கமானதாக நிரூபித்த கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரத்திற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், சேலஞ்சர்ஸ் பிரிவில் சிறப்பாக வென்ற பிரணவ், எதிர்காலத்திற்கான மகத்தான நம்பிக்கையாக திகழ்வதாகவும் முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், உலக செஸ் அரங்கில் சென்னையின் அந்தஸ்தை மேலும் உயர்த்தும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நிகழ்விற்காக தமிழக விளையாட்டுத் துறைக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் பாராட்டுகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.