நாம் தமிழர் கட்சி கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி தொடங்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அக்கட்சியில் இளைஞர்கள் அதிகளவில் சேர்ந்து மிக தீவிரமாக பணியாற்றி வந்தனர்.
அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவருக்கு அடுத்தப்படியாக பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் திராவிட எதிர்ப்பு கருத்தியலை உணர்ச்சி பூர்வமாக பேசுவார்கள். அந்த பேச்சு இளைஞர்களை சுண்டி இழுத்தது. தேர்தலுக்கு தேர்தல் அக்கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துக் கொண்டே வந்தது. திமுக – அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளின் செல்வாக்கையும் மீறி மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியை பெறுவது சாதாரணமானது அல்ல.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியினால் முதலில் வீழ்ந்த கட்சிகள் சிபிஐ, சிபிஎம் ஆகிய இரண்டு இடதுசாரி கட்சிகள். அடுத்தது பெரும் கட்டமைப்பு கொண்ட மதிமுக காலியானது. அதனை தொடர்ந்து பாமக, விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அனைத்தையும் பின்னுக்கு தள்ளி குதிரை வேகத்தில் முன்னேறி, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியை பெற்றது.
நாம் தமிழர் கட்சி கடந்த 2016ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து. அப்போது 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனித்து 1.1 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. அதன் பின்னர் 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அந்த தேர்தலில் 3.9 சதவிகிதம் வாக்குகளை பெற்று தெம்பாக நடைப்போட்டது. அந்த தேர்தலில் முதன் முதலில் களமிறங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு 3.7 சதவீதம் வாக்குகளும் டி.டி.வி.தினகரன் கட்சிக்கு 5.5 வாக்குகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை அடுத்து 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று 6.58 சதவீதம் வாக்குகளை பெற்று எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த தேர்தலில் 170 தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதேபோன்று 2024ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 40 தொகுதிகளில் போட்டியிட்டு 32 லட்சம் வாக்குகளை அள்ளியது.
திருச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்தது. மற்ற தொகுதிகளில் 4வது இடத்தை பிடித்தது. அந்த தேர்தலில் 8.1 சதவீதம் வாக்குகளை பெற்று கம்பீரமாக எழுந்தது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி ஒரு கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை என்றாலும் 8 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தால் அது அங்கிகாரம் பெற்ற கட்சியாகிவிடும். அந்த வகையில் தேர்தல் ஆணையத்தினால் அங்கிகாரம் பெற்ற கட்சியாக நாம் தமிழர் கட்சி உயர்ந்துள்ளது.
இதற்கு மேல் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு எப்படி இருக்கும்?
கடந்த 2010 முதல் 2024 வரை நடந்த 4 தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி படிப்படியாக உயர்ந்து இருக்கிறது. அதை மறுக்க முடியாது. ஆனால் அந்த வளர்ச்சி ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு போதுமானதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
மதவாதம் போன்று இனவாதமும் உணர்ச்சி அரசியல் தான். அந்த இனவாத அரசியலுக்கு என்று உணர்ச்சிப் பூர்வமான இளைஞர்கள் கூடுவார்கள். அவர்களை முறைப்படி ஜனநாயக அரசியல் பாதைக்கு பயிற்றுவிக்காமல் போனால் தொடர்ந்து கட்சியில் பயணிக்க மாட்டார்கள். தமிழ்நாடு போன்ற சிந்திக்க தெரிந்த மக்கள் உள்ள மண்ணில் எப்போதும் உணர்ச்சி அரசியல் எடுபடாது.
1949ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கினார். தன் பின்னால் வந்த தம்பி களுக்கு அரசியல் பாடம் நடத்தினார். பயிற்றுவித்தார். அரசியலில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கோட்பாட்டோடு வழி நடத்தினார். அதன்படி அண்ணாவும் வாழ்ந்து காட்டினார். அதனால் கட்சி தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தார்.
நாம் தமிழர் கட்சி தொடங்கி 14 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு கவுன்சிலர் சீட்டுக் கூட பிடிக்கவில்லை. தேர்தல் பாதைக்கு வந்த பின்னர் உழைக்கும் தொண்டன் அங்கிகாரத்தை எதிர்பார்ப்பான். ஏதாவது ஒரு அங்கிகாரம் கிடைக்கும் என்று கையில் இருந்த பணத்தை எடுத்து செலவு செய்வதற்கு தயங்கவே மாட்டான். கட்சிக்காக ஓடி ஓடி உழைப்பான், இரவும் பகலும் தூங்காமல் உழைப்பான், கையிலிருந்த இருப்பை எல்லாம் இழப்பான். ஒரு நாள் அவனையே அவன் திரும்பி பார்ப்பான். அவ்வளவுதான், கட்சியை தூக்கி போட்டுவிட்டு குடும்பத்தை கவனிக்க போய்விடுவான். இதுதான் மதிமுக வில் நடந்தது. இப்போது நாம் தமிழர் கட்சியிலும் நடந்து வருகிறது.
மதிமுக வின் தலைவர் வைகோ, பொதுவாழ்க்கையில் நேர்மையாக இருந்தார், தனிமனித வாழ்க்கையிலும் ஒழுக்கமாக இருந்தார். தனிமனித தாக்குதலை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார். தன்னிடம் ஒரு கூட்டம் இருக்கிறது என்கிற ஆணவத்தில் ஒருவரையும் மரியாதை குறைவாக பேசமாட்டார். அரசியல் ரீதியாக தான் விமர்சனம் செய்வார். ஆனால் அவருடைய அரசியல் நிலைபாடுகள், அணி விட்டு அணி மாறும் அவசர முடிவுகள் தான் அரசியல் களத்தில் வைகோ பின்னடைவை சந்தித்தார்.
நாம் தமிழர் கட்சியின் அரசியல் நிலைபாடு சரியாக இருக்கிறது. திமுக, அதிமுகவிற்கு மாற்று அரசியல், திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பெறுவதில் தெளிவான பயணம் இருக்கிறது. ஆனால் தலைவர் முதல் தொண்டர்கள் வரை தனி மனித தாக்குதல்களும், அருவருப்பான சொல்லாடல்களும், ஆடியோ வெளியிடுதல் போன்ற செயல்களும் அக்கட்சியின் செல்வாக்கை சிதைத்து வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் உடல் மொழியையும், வாய் மொழியையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி மாறா விட்டால் வீழ்ச்சியை சந்திப்பார் என்று மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் கூறுகிறார்.
தற்போது கணினி உலகத்தில் வாழ்கிறோம், எல்லோரும் படித்திருக்கிறார்கள் என்கிற எச்சரிக்கை உணர்வு கூட இல்லாமல் வாயை திறந்தால் பொய் மட்டும் பேசுவதை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் போது பந்தை தான் உதைக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். ஆனால் நாம் தமிழர் கட்சியினர் பந்தை உதைப்பதற்கு பதிலாக போட்டியாளர்களை உதைக்கிறார்கள். அதுதான் அந்த கட்சியின் முட்டுக்கட்டைக்கு காரணம்.
திராவிட இயக்கங்களின் எதிர்ப்பு வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக தமிழர்களை சிந்திக்க விடாமல் மடைமாற்றும் அரசியலை செய்வதை மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.
திராவிட இயக்கத்தின் மீது எதிர்ப்பு அரசியல்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி தொடங்கியதற்கு முன்பு, திராவிடத்தைப்பற்றி பேசியிருக்கிறார். திராவிடம், பெரியார், என்று நிறைய பேசியிருக்கிறார். திராவிடம் என்பது நிலப்பரப்பு, தமிழ் என்பது இனத்தின் அடையாளம். இரண்டும் ஒன்றுதான். திராவிடம் இல்லை என்றால், தந்தை பெரியார் இல்லை என்றால் இந்தி உள்ளே வந்திருக்கும். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெறவில்லை. சமஸ்கிருதம் எதிர்ப்பு உணர்வு இல்லை. அதனால் மற்ற மாநிலங்களில் எல்லாம் பாஜக உள்ளே நுழைந்து விட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. அதற்கு காரணம் திராவிடம். தந்தை பெரியார். ஆனால் திமுகவை மட்டும் எதிர்த்து அரசியல் செய்தால் மட்டும் போதாது. திமுக எதிர்ப்பு என்ற பெயரில் கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு என்பது தனிமனித தாக்குதலை, வெறுப்பு அரசியலை நாம் தமிழர் கட்சி செய்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தினால் நாம் தமிழர் கட்சிக்கு சரிவு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்கள் 5 சதவீதம் பேர் வாக்களிக்க வருகிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் சுமார் 2 சதவீதம் இளைஞர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வந்தார்கள். அதுதான் கடந்த 4 தேர்தல்களிலும் நடந்தது. அதுதான் அக்கட்சியின் வளர்ச்சியாக இருந்தது. தற்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தனது கட்சியின் அடுத்தகட்ட தலைவர்கள் காளியம்மாள் போன்றவர்களை வெளியேற்ற ஆடியோ வெளியிடுதல், தனி மனித வெறுப்பு அரசியல் போன்ற காரணங்களினால் அந்த கட்சியின் செல்வாக்கு குறைந்து வரும் இந்த காலக்கட்டத்தில் நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் நடிகர் விஜய்க்கு இளைஞர்களிடம் தனி செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் அனைவரும் உடனடியாக உணர்ச்சி வசப்பட கூடியவர்கள், கவர்ச்சி அரசியல் பின்னால் செல்லக் கூடியவர்கள், திமுக- அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் வெறுக்க கூடிய அந்த இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் பெரும்பாலும் இதுவரை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த இளைஞர்களுக்கு சீமானை விட , விஜய்யை பிடித்து போவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. அதனால் நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு சரியுமே தவிர உயர்வதற்கு காரணம் எதுவும் இல்லை.