சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு முதல் மழை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக , நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில் தமிழ்நாடு – இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என தெரிகிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அத்துடன் கடலின் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள வானிலை மையம், இன்று (நவ.12) முதல் 18 ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் ஆந்திராவில் அடுத்த 3 நாட்களுக்கும், கர்நாடகாவில் அடுத்த 2 நாட்களுக்கும், கேரளாவில் அடுத்த 6 நாட்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் நிலவி வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று காலை முதலே வானம் இருண்டு மேகமூட்டத்துடன், குளிர்ந்த காற்று வீசி வந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிதமான மற்றும் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையிலேயே அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து இடியுடன் கூடிய மிதமான மழை பெய்துவரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழை வெறும் ட்ரெய்லர் தான் எனவும், இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“இன்று பகல் 12 மணி வரை ஒரு சில இடங்களில் சீரான மழையும், சில இடங்களில் விட்டு விட்டும் மழை பெய்யக்கூடும். ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பகுதிகளில் மழை நின்ற பிறகு வட சென்னையில் மழை பொழிவு குறையும். மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும். பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழையை எதிர்ப்பார்க்கலாம்” என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.