Homeசெய்திகள்தமிழ்நாடுபாம்பன் பாலத்தில் மீனவர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

பாம்பன் பாலத்தில் மீனவர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

-

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பாம்பன் பாலத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 9-ஆம் தேதி 3 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்களை, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், கைதுசெய்தனர். மேலும் அவர்களது 3 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்தனர். தொடர்ந்து, 23 மீனவர்களையும் வரும் 25ஆம் தேதி வரை  யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், 23 மினவர்கள் மற்றும் அவர்களது 3 படகுகள் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து, ராமேஸ்வரத்தை மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள்  பாம்பன் சாலை பாலத்தில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, இலங்கை அரசை கண்டித்தும், மீனவர்களை சிறைபிடிக்கப்படுவதை தடுக்காத மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். மேலும், இலங்கை கைது செய்த மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, பாம்பன் பாலத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மீனவர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மீனவர்கள் போராட்டம் காரணமாக சுமார் 2.30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

MUST READ