சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை பணிக்கு வந்த அதிகாரிகள், வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கிரில் கேட் மற்றும் வங்கியின் கதவுகளில் உள்ள பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக உடனடியாக வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது
வங்கியில் இருந்த பணம் கொள்ளை போய் உள்ளதா என்று அதிகாரிகள், தடயவியல் துறை அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் ஆய்வு செய்தனர். விசாரணையின் போது வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், வங்கியில் அதிகாரிகள், காவல்துறையினர் ஆய்வு செய்ததில் வங்கியில் பணம் எதுவுத் கொள்ளை போகவில்லை என்று வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தொடர்பாக போலீஸார் விசாரனை மேற்கொண்டனர்.
விசாரனையில், அந்த மர்மநபர் அடுத்தடுத்து இரண்டு பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார் என்பதும் பணம் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை உடைக்கும்போது வங்கியில் உள்ள அலாரம் ஒலித்ததில் ,சற்றும் எதிர்பாராத அவர் அங்கிருந்து உடனடியாக ஓட்டம் பிடித்துள்ளார் என்பது அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது.
அதன் அடிப்படையில் தலைமறைவாக உள்ள அந்த நபரை தனிப்படை அமைத்து தேடிவருகிறோம் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.