விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம்ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி – ஆர்த்தி ரவி தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்தார்.
இந்த நிலையில், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், 2009ஆம் ஆண்டு பதிவுசெய்த தங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த வழக்கு சென்னை 3-வது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ஜெயம் ரவி, விசாரணைக்கு நேரில் ஆஜராகி இருந்தார். அவரின் மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகினார்.
இதனையடுத்து நீதிபதி இருவருக்கு இடையான பிரச்சினை தொடர்பாக குடுநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் உத்தரவிட்டார். அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பான விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இன்றே இருதரப்பும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு நடத்துமாறு அனுப்பி வைத்தார்.