கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் பல மொழிகளில் உலகம் முழுவதும் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசன் படத்தை தயாரித்திருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி வெளியாகியிருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து ராகுல் போஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார் சி.ஹெச்.சாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து தற்போது வரையிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த படம் கிட்டத்தட்ட 300 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வருவதால் இதன் ஓடிடி ரிலீஸையும் தள்ளி வைக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதன்படி இனி வரும் படங்களில் நடிக்க ரூ. 55 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம் சிவகார்த்திகேயன். அதேபோல் நடிகை சாய் பல்லவியும் ரூ.3 கோடியிலிருந்து ரூ.6 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எப்படி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாரோ அதேபோல் அவருக்கு நிகராக சாய் பல்லவியும் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.