அழிக்கப்பட்டுவரும் நீர் நிலைகளை காப்பாற்ற கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட திருச்சி மாவட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் நீர்நிலைகளை அழித்து வருவதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 15ற்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை தலைமைச் செயலகத்திற்கு முன்பாக தண்ணீர் அருந்தா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், திருச்சி மாவட்டத்தில் 13 ஏரிகளை அழித்து வருவதாகத் முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் ம.ப சின்னதுரை பேசுகையில்,
திருச்சி மாவட்டத்தில் அழிக்கப்பட்டுவரும் நீர் நிலைகளால் மழைக் காலத்தில் வெள்ளமும், கோடைக்காலத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டை வைத்தனர்.
வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் திருச்சி மாநகர், புறநகர்ப் பகுதிகளில் தேசிய அரை வட்ட சுற்றுச் சாலை NH 67 அமைப்பதற்காக நீர்நிலைகள் துவாக்குடி, பெரியகுளம், உள்ளிட்ட 13 ஏரிகளை மண்ணைக் கொட்டி அழித்து வருகின்றனர் எனத் தெரிவித்தனர்.
மேலும், திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் காவல் துறையினர் கலைந்து போக அறிவுறுத்தியும் கலைந்து செல்லாமல் தலைமைச் செயலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் காவல் துறையினர் கைது செய்தனர்.