நயன்தாரா – தனுஷ் விவகாரத்தில் முன்னணி நடிகைகள் பலரும் நயன்தாராவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நடிகை நயன்தாரா தனது திறமையால் தென்னிந்திய திரை உலகில் தனக்கென மிகப் பெரிய அந்தஸ்தை உருவாக்கிக் கொண்டவர். அதன்படி தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் கால் தடம் பதித்திருக்கிறார். இந்நிலையில் தான் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனவே இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த இவர்களது திருமண வீடியோ வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் NAYNATHARA: Beyond the Fairy Tale என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது. மேலும் அந்த ஆவணப் படத்தில் நயன்தாராவின் திருமண வீடியோ மட்டுமல்லாமல் சிறுவயதில் இருந்து இன்று வரை அவர் கடந்து வந்த சவாலான சில பயணங்களும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தான் நடிகை நயன்தாரா, இந்த திருமண ஆவணப்படத்திற்காக நடிகர் தனுஷை குற்றம் சாட்டியிருக்கிறார். அதாவது தனுஷின் தயாரிப்பில் வெளியான நானும் ரெளடி தான் என்ற படத்தின் போது தான் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. எனவே தங்களின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் படப்பிடிப்பு காட்சிகளை இணைக்க விரும்பி அதற்காக தனுஷிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் தனுஷ் தனிப்பட்ட சில காரணங்களுக்காக இதுவரை அனுமதி வழங்காமல் இருந்த காரணத்தாலும் ஆவணப்படம் தொடர்பான ட்ரெய்லரில் நானும் ரெளடி தான் படத்தின் 3 வினாடி காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் அதற்குப் 10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதான் காரணத்தினாலும் தனுஷ் மீது குற்றம் சாட்டியுள்ளார் நயன்தாரா. இது தொடர்பாக மிக நீளமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கையை பலரும் லைக் செய்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தனுஷுடன் இணைந்து நடித்த ஸ்ருதிஹாசன், பார்வதி, நஸ்ரியா, அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நயன்தாராவிற்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.