Homeசெய்திகள்கட்டுரைமகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - கணிக்க முடியாத கள நிலவரம்..!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – கணிக்க முடியாத கள நிலவரம்..!!

-

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - கணிக்க முடியாத கள நிலவரம்..!!
இந்தியாவின் மிக முக்கியமான தொழில்துறையில் முதன்மையான மாநிலமான மகாராஷ்டிராவின் சட்டப்பேரவை தேர்தல் களம் இறுதி கட்டத்தில் உள்ளது. வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் நிரந்தர கூட்டாளியாக இருந்து வந்தார்கள். அந்த கூட்டணி அம்மாநிலத்தில் வெற்றிக் கூட்டணியாகவே இருந்து வந்தது.

அந்த கூட்டணியை உடைத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதலமைச்சரானார். சிவசேனா என்ற இந்துத்துவ கட்சியை பாஜக கூட்டணியில் இருந்து பிரித்து காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்து வந்ததின் பெருமை சரத்பவார் என்ற அரசியல் சாணக்கியரை தான் சேரும். 2019ல் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் ஆனதை பாஜக வால் ஜீரணிக்க முடியவில்லை. இரைக்காக காத்திருந்த கழுகைப்போல சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைக்க பாஜக காத்திருந்தது.

2022ம் ஆண்டு முதலில் சிவசேனா கட்சியை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியை பிடித்தது. பெரும்பாலன எம்எல்ஏக்கள் ஷிண்டே பக்கம் வந்ததால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆடிப் போனது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தது. அதனை தொடர்ந்து சாணக்கியர் என்று கூறப்படும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித்பவாரை வைத்து உடைத்தது. சரத்பவாரின் சொந்த அண்ணன் மகன் மற்றும் அவருடைய நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த அஜித்பவாரை வைத்தே தேசியவாத காங்கிரஸ் கட்சியை காலி செய்தார்கள்.

மகாராஷ்டிரா தேர்தல்

பாஜக- ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி ஒரு பக்கம், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி எதிர்த்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

நம்பிக்கை துரோகம், உறவுகளில் துரோகம், மராட்டிய மக்களுக்கு இழக்கப்பட்ட கொடுமை என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி பிரச்சாரம் செய்தது. அதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது.

அதே கூட்டணி கட்சிகள் தான் தற்போது போட்டியிடுகிறது. மீண்டும் அதேபோன்று ஒரு வெற்றி சட்டமன்றத் தேர்தலிலும் பெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த முறை பாஜக உஷாராகி விட்டது. எப்படியாவது மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப் பெற்றே தீரவேண்டும் என்று பாஜக முடிவெடுத்து விட்டது. அதேபோன்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் விளையாட்டு எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - கணிக்க முடியாத கள நிலவரம்..!!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மகளிர் உரிமை தொகை திட்டத்தை மகாராஷ்டிராவில் அமல்படுத்தி உள்ளார். குடும்ப தலைவிக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கி வருகிறார். இதன் மூலம் மாதம் 2 கோடி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை யார் வேண்டுமானாலும் மிக எளிமையாக அணுக முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டார். இதனால் பாஜக கூட்டணி கட்சிகள் உற்சாகமாக பணியாற்றி வருகிறது.

காங்கிரஸ் கூட்டணி, ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகை மாதம் 3,000 ரூபாய் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் சிறுபான்மை வாக்காளர்கள் இந்த கூட்டணிக்கு ஆதரவாக இருப்பது பெரும் பலமாக இருக்கிறது. இருதரப்பு கூட்டணிக் கட்சிகளும் சம பலத்தில் களத்தில் இருந்து வருகிறது. நாட்டளுமன்ற தேர்தலைப்போல் ஒரு அணிக்கு மட்டும் சாதகமான சூழல் அமைவதற்கான வாய்ப்பு இல்லை. மேலும், பாஜக மற்றும் காங்கிரஸ் அணிகளில் சீட்டுக் கிடைக்காத நபர்கள் போட்டி வேட்பாளராக களமிறங்கியுள்ளனர். அவர்கள் பெறும் வாக்குகள் ஒரு அணியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடிய நிலையில் உள்ளது. ஆகையால் கணிக்க முடியாத தேர்தல் களமாக மகாராஷ்டிரா இருக்கிறது. வரும் 20ம் தேதி தேர்தலின் போது தான் தெரியும்.

 

 

MUST READ