பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி இளைஞர் உயிரிழப்புக்கு H3N2 வைரஸ் பாதிப்பா? அல்லது வேறு ஏதேனும் இணை நோய் இருந்ததா? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழ்நாடு அரசு நடத்திய சிறப்பு முகாம்களில் 2 ஆயிரத்து 623 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டக் கூறினார். இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என கூறினார்.