புதுச்சேரியில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வழக்கில்,பெங்களூரில் தலைமறைவாக இருந்த சென்னை தம்பதியை போலீசார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவியின் தம்பி கணபதி இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை தேடி வந்துள்ளாா். அப்போது வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சி நடத்தி வந்த சென்னை வேளச்சேரியை சேர்ந்த சாந்தி மீனா என்பவர் அறிமுகமாகியுள்ளாா். கணபதிக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும் மாதம் சம்பளம்3 லட்சம் கிடைக்கும் என்று கூறியள்ளாா். இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு மூன்று தவணையாக ரூபாய் 12,49,000 சாந்தி மீனாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் சாந்தி மீனா, கணபதிக்கு வேலை வாங்கித் தரவில்லை.
பின் 2019 ஆம் ஆண்டு பழனிவேல், சாந்தி மீனாவை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடியில் ஈடுபட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக பெங்களூரில் தலைமறைவாக இருந்த சாந்தி மீனா, அவரது கணவர் பாரதிராஜா ஆகியோரை லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் கைது செய்து, புதுச்சேரி அழைத்து வந்து காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.