ராமநாதபுரம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் திருப்பூரை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன், மாலை அணிந்து தனது நண்பர்களான தீபக் அரவிந்த், நாகராஜ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருடன் சபரிமலைக்கு சென்றுள்ளார். பின்னர் அனைவரும் ராமேசுவரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கேயே மாலை கழற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து, 4 பேரும் பல்லடத்திற்கு காரில் புறப்பட்டு சென்றனர்.
ராமேசுவரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் அருகே காவனூர் பகுதியில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பால தடுப்பு சுவர் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் சண்முகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த தீபக் அரவிந்த், நாகராஜ், கார்த்திகேயன் ஆகியோர் மீட்கப்பட்டு ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி தீபக் அரவிந்த், நாகராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கார்த்திகேயனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.