மகாராஷ்டிராவில் 14வது சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. 15வது சட்டசபைக்கு பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரப்படவில்லை. இதைத் தொடர்ந்து, முடிவு எட்டப்படாமல் இருந்தால், மகாராஷ்டிராவில் நவம்பர் 26ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது.
2019 தேர்தலுக்குப் பிறகு, சிவசேனா- பாஜக இடையே முதல்வர் பதவிக்காக நீண்ட இழுபறி நிலவியபோது, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தார். பின்னர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சி அமைத்து 11 நாட்களுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கப்பட்டது. அந்த ஆட்சி 80 மணி நேரம் மட்டுமே நீடித்தது. அதன் பிறகு உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.
மகத்தான வெற்றிக்குப் பிறகும், மகாயுதி கூட்டணி முதல்வரை அறிவிப்பதில் குழ்ப்பம் நீடிக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவில்லை. ஆனால் மகாராஷ்டிராவில் 15 வது சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி புதிய சட்டசபை அமைப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் நேற்று முடித்து விட்டது. மாநில தேர்தல் முடிவுகள் நவம்பர் 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் பெயர்கள் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் மூலம் மகாராஷ்டிரா அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 -ன் பிரிவு 73 ன் விதிகளின்படி இந்த செயல்முறை முடிக்கப்பட்டது. நவம்பர் 24 ஆம் தேதியே, தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் ஹிர்தேஷ் குமார், மகாராஷ்டிராவின் தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ்.சொக்கலிங்கம் ஆகியோர் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழின் நகலை வழங்கினர்.
குறிப்பிட்ட காலத்திற்குள் ஆட்சி அமைப்பது பற்றி முடிவெடுக்காமல் இருந்தாலோ அல்லது எந்த கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை என்றாலோ, ஆளுநர் 356வது பிரிவைப் பயன்படுத்த வேண்டும். குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும். விதிப்படி, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சட்டசபையை கலைக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 172, மாநிலங்களின் சட்டமன்றங்களின் பதவிக்காலம் நியமிக்கப்பட்ட தேதி வரை ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும் என்று கூறுகிறது.
அவசரநிலை ஏற்பட்டால், ஐந்தாண்டு காலத்தை நாடாளுமன்றம் ஓராண்டுக்கு நீட்டிக்க முடியும். மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படாவிட்டால், ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க பல வழிகள் உள்ளன. சட்டசபையில் பெரிய கட்சியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்கலாம். பாஜக பதவியேற்க ஒப்புக்கொண்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி தவிர்க்கப்படும். பாஜக மறுத்தால், சிவசேனாவுக்கு அழைப்பு விடுக்கப்படும்.