பழனிசாமியால் வட்டார கட்சியானது அதிமுக- டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியால் அதிமுக ஒரு வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக 6ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “இரட்டை இலை சின்னமும், அதிமுகவும் துரோகிகள் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. உண்மையான தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அதிமுகவின் தோல்விக்கு முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியே காரணம். எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவால் இடைத்தேர்தலில் வெல்ல முடியவில்லை. அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. இன்னும் பலவீனப்பட்ட பிறகே திருந்துவார்கள். பழனிசாமியின் பிடியில் அதிமுக இருக்கும் வரை கட்சி மிகவும் பலவீனம் அடையும்.
வருங்காலத்தில் ஜெயலலிதாவின் லட்சியங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கப்போவது அமமுக தான். சுய காரணங்களுக்காக அமமுகவினர் வேறு கட்சிக்கு செல்வதை தடுக்க முடியாது” எனக் கூறினார்.