தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது விடுதலை பாகம் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ், பவானி ஸ்ரீ, சேத்தன், இளவரசு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனமும் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அதன்படி நேற்று (நவம்பர் 26) இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய வெற்றிமாறன் மஞ்சுவாரியர் குறித்து பேசி உள்ளார். “மஞ்சுவாரியர் விழாவிற்கு வரவில்லை என்பதால் அவரைப் பற்றி யாருமே பேசவில்லை. மஞ்சுவாரியரை நான் கெஸ்ட் ரோல் என்றுதான் இந்த படத்தில் நடிக்க அழைத்தேன். மூன்று காட்சிகள் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அழைத்தேன். ஆனால் இப்போது அவர்களுக்கு படத்தில் இரண்டு பாடல் இருக்கிறது. அவர் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அசுரன் படத்திற்கு பிறகு அவருடன் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் ஸ்பெஷலானது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -