அதானியை கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவில் கோரிக்கையாக உள்ளது. அதை திசை திருப்ப இசைவாணி போன்ற சில்லறை பிரச்சனைகளை பெரிது படுத்துகிறார்கள், இது ஏற்புடையதல்ல-திருமா
வி.பி.சிங். பாதுகாத்த சமூக நீதிக்கு இன்றைக்கு பல முனைகளில் இருந்து பேராபத்து சூழ்ந்துள்ளது, இந்த சதியை முறியடித்து சமூக நீதியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு இன்றியமையாதது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
சமூகநீதி காவலர் வி.பி சிங் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக நீதியை பாதுகாத்த மகத்தான போராளி வி.பி.சிங். ஆட்சியை பறிப்பார்கள் என தெரிந்து அதை பற்றி கவலைப்படாமல் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டியவர். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கத்தை செலுத்துவதோடு, அவர் பாதுகாத்த சமூக நீதிக்கு இன்றைக்கு பல முனைகளில் இருந்து பேராபத்து சூழ்ந்துள்ளது. இந்த சதியை முறியடித்து சமூக நீதியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து சனாதான எதிர்ப்பு சக்திகளுக்கும் உள்ளது. தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்று இணைய வேண்டும். சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு இன்றியமையாதது, என்றார்.
பாஜக அரசு தமிழ்நாட்டை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறது. தமிழ்நாட்டினை வஞ்சிப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதிலும் குறியாக இருக்கிறது. அந்த வரிசையில் இதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. தஞ்சை மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை. அப்படித்தான் அதிமுக ஆட்சியில் சொல்லப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதை மறுதலித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். அதிமுகவும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். அரசமைப்பு சட்டம் பன்முகத்துவத்த கூறாகக் கொண்டுள்ளது. அது முற்றாக ஒழிக்கும் அரசியல் முயற்சி தான் ஒரே தேசம் ஒரே ஆட்சி என்ற பாஜகவின் அரசியல் நிலைப்பாடாகும். அது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது, என்றார்.
இசைவாணி குறித்த கேள்விக்கு, மத உணர்வை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாடப்பட்ட பாடல் அல்ல. பெண்ணிய குரலாக, பெரியாரின் குரலாக அந்த குரல் இசையாக வெளிவந்துவிட்டது. தவிர யாருடைய உணர்வையும் காயப்படுத்தும் வகையில் இல்லை. அதானி போன்ற பிரச்சனைகளை திசை திருப்ப தமிழ்நாட்டில் இதை பெரிது படுத்துகிறார்கள். அதானியை கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவில் கோரிக்கையாக உள்ளது. அதை திசை திருப்ப சின்ன பிரச்சனைகளை பெரிது படுத்துகிறார்கள். இது ஏற்புடையதல்ல. இசைவாணி கைது செய்ய வேண்டும் என்று சொல்வது ஏற்புடையதல்ல. முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமகவினர் போராட்டம் நடத்தி வருவது தொடர்பான கேள்விக்கு, கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.
‘அவமானமாக இல்லையா ராமதாஸ்..? கொந்தளிக்கும் வன்னிய சமூக நிர்வாகிகள்- பாமக-வை வெறுக்கும் இளைஞர்கள்