திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பேய் ஓட்டுவதாகக்கூறி பெண் ஒருவரை , கோயில் பூசாரி கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய நவீன காலத்தில் பல மூடநம்பிக்கைகளை விஞ்ஞானம் பொய்யாக்கிவிட்டது. ஆனாலும் காலம் காலமாக நமக்குச் சொல்லப்பட்டு வரும் கதைகளில் கடவுள்களுக்கு அடுத்து, ஏன் கடவுளுக்கே டஃப் கொடுத்துக்கொண்டு இன்னும் மறையாமல் இருப்பது பேய்கள் தான். நகைச்சுவை கலந்த சினிமாக்களின் மூலம் பேய்கள் குறித்தான கண்ணோட்டம் மாறினாலும், பேய், பிசாசு, காத்துக்கருப்பு போன்றவற்றின் அச்சாணியை முற்றிலுமாக அழித்தொழிக்க முடியவில்லை. நிறைவேறாத ஆசையுடன் இறந்தவர்கள் பேயாக வருவார்கள், பழிவாங்கத் துடிக்கும் பிரேதாத்மா காற்றில் சுற்றிக்கொண்டிருக்கும், தனக்கென ஒரு உடலைக் கண்டுபிடித்து அந்த உடலில் சேர்ந்துவிடும், பேய் இருப்பதை கண்டிபிடிக்க வழி இருக்கு என பல கற்பனைக் கதைகளுக்கு சினிமாவும் வலு சேர்த்துக்கொண்டேதான் இருக்கிறது.
தோட்டத்திற்கு செல்லும்போது காத்துசேட்டை பட்டுவிட்டது, குழந்தை இல்லாத பெண்களுக்கு பேய் பிடித்திருக்கிறது, காத்துக்கருப்பு பிடித்துவிட்டதால் குழந்தை தங்கவில்லை, குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்துவிட்டால் காத்து சேட்டை பார்த்து பயந்துவிட்டது என இன்றளவிலும் கிராமங்களில் அதிகம் இவை நம்பப்படுகின்றன. இந்த நம்பிக்கையின் பலனாகவே பல பூசாரிகள், பாஸ்டர்கள், பாதிரியார்கள், சாமியாடிகளின் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இதுஒருபுறம் இருக்க பேய் ஓட்டுவதாக சொல்லப்படும் நிகழ்வு இருக்கிறதே..! அது மிகவும் கொடூரமானது. பேய் பிடித்ததாக சொல்லப்படும் நபரை ஒரு பாடு படுத்தி எடுத்துவிடுவார்கள். விளக்கமாறால் அடித்தால் பேய் ஒடிவிடும். வேப்பங்குச்சியால் அடித்தால் ஓடிவிடும், எருக்கங்குச்சியால் அடித்தால் ஓடிவிடும் என கிடைக்கும் பொருளை எல்லாம் கொண்டு ஒரு காட்டு காட்டி விடுவார்கள். அதிலும் அடிக்கும் ஒவ்வொரு அடியும் பேய்க்குத்தான் வலிக்குமாம், பேய் பிடித்ததாக சொல்லப்படும் நபரின் உடலுக்கு வலி தெரியாது என்று வேறுச்சொல்லி தப்பித்துக்கொள்வார்கள்.
இதில் அடி தாங்க முடியாமல் அந்த நபர் கோபம் கொண்டாலோ, ஆத்திரம் பொங்க கத்தினாலோ, அழுதாலோ பேய் தான் முரண்டு பிடிக்கிறது என்று சொல்வார்கள் பாருங்கள் அதுதான் வேடிக்கை. அத்துடன் தலைமுடியை பிடித்து இழுத்து அடிப்பதும், பேய் பிடித்ததாக சொல்லப்படும் நபரின் முடியை பிய்த்து புளியமரத்த்தில் ஆணியடித்து வைப்பது போன்றவையும் அரங்கேறும். இன்னும் ஒரு படி மேலாகச் சென்று குழந்தை இல்லாத பெண்களுக்கு காத்துக்கருப்பு அண்டிவிட்டதாகச் சொல்லி செய்யும் பரிகாங்கள் தலைச்சுற்றவைக்கும். இதில் பேயை ஓட்ட அசைவ விருந்து, சாராயம், பீடி, சுருட்டு, வெற்றிலை பாக்கு-சுண்ணாம்பு என பூசாரியின் பட்டியல் செலவு தனி.
இந்த வரிசையில் வேடசந்தூர் அருகே பேய் பிடித்ததாக கூறி பெண்ணை கருங்காலி குச்சியால் கொடூரமாக தாக்கும் பூசாரியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பூர் முனியப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக்கோயிலுக்கு பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். அவ்வாறு முனியப்பன் கோயிலுக்கு தரிசனத்திற்காக வரும் பெண்களை, அந்தக் கோவிலின் பூசாரி ஒருவர் கருங்காலி குச்சியால் அடித்து பேய் ஓட்டுவதாக கூறப்படுகிறது.
அப்படி, நேற்று அம்மாவாசை தினத்தை முன்னிட்டு அந்தக் கோயிலுக்குச் சென்ற பெண் ஒருவரை பேய் பிடித்து இருப்பதாக கூறி பூசாரி கொடூரமாக தாக்கியிருக்கிறார். அதுவும் தான் வைத்திருந்த கருங்காலி கட்டையால் அடித்துள்ளார். போதாத குறைக்கு அப்பெண்ணின் முடியை இழுத்து கையில் பிடித்துக்கொண்டு , மண்டியிடச்செய்து கட்டையால் அடித்திருக்கிறார். இதனை தடுக்க முயன்ற அந்தப் பெண்ணின் தாயையும் , பக்கத்தில் வரக்கூடாது என பூசாரி தாக்க முயல்கிறார்.
இத்தனைக் கொடுமையையும் அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இதில் ஒரு முதியவர் மட்டும் அந்தப் பூசாரியை எதிர்த்து கேள்வி கேட்டதோடு அவரை தடுக்கவும் முயன்றார். ஆனால் கோயில் பூசாரியோ, என்னையே அடிக்கிறாயா எனக்கூறி அவரையும் தாக்க முற்படுகிறார். இந்த சம்பவத்தை அந்தக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பெண்ணை பூசாரி கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக்காட்சிகளை பார்க்கும்போது அந்தப் பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறதா? அல்லது அந்தப் பூசாரிக்கு பேய் பிடித்திருக்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது. உடனடியாக போலீஸார் அந்த பூசாரியை கைது செய்து அவருக்கு பிடித்திருக்கும் பேயை முதலில் ஓட்ட வேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.