பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் மரணம்.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கே.எஸ். ரவிக்குமார். இவர் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கைவசம் வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் துணை இயக்குனராக பணியாற்றி பின்னர் புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்து அடுத்தடுத்த பல வெற்றி படங்களை கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். அந்த வகையில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய், அஜித், சூர்யா என பல பெரிய நடிகர்களை இயக்கி பெயர் பெற்றவர். இவரது இயக்கத்தில் வெளியான படையப்பா, தெனாலி, அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம் போன்ற படங்கள் இன்று வரையிலும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களாகும். அதன்படி இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் இன்றைய தலைமுறையினரும் ரசிகன் படியான படங்களாகும். இவர் தற்போது திரைத்துறையில் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் கடைசியாக சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில படங்களிலும் பணியாற்றி வருகிறார் கே.எஸ். ரவிக்குமார். இந்நிலையில் கே எஸ் ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் நேற்று (டிசம்பர் 4) மாலை உயிரிழந்தார். சென்னை சின்னமலை பகுதியில் உள்ள கே.எஸ். ரவிக்குமாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் ருக்மணி அம்மாளின் உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் கே.எஸ். ரவிக்குமாருக்கு தங்களின் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று (டிசம்பர் 5) மதியம் 2.30 மணிக்கு ருக்மணி அம்மாவின் இறுதி சடங்கு நடைபெற இருப்பதாக கே.எஸ். ரவிக்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.