ஏரியூர் பேருந்து நிலையத்தின் அருகே பரிசல் கட்டணம் உயர்வை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகமரை பரிசல் துறை உள்ளது இந்த பரிசல் துறையிலிருந்து சேலம் மாவட்டம் செல்ல ஆற்றைக் கடந்த செல்ல வேண்டி உள்ளது. இதற்கு பரிசல் இயக்க மூன்றாண்டுக்கு ஒரு முறை சேலம் மாவட்டத்திற்கும் மூன்றாண்டுக்கு ஒரு முறை தருமபுரி மாவட்டத்திற்கும் டெண்டர் விடப்படுவது வழக்கம். சென்றாண்டு டெண்டர் விடப்பட்டு ஒரு நபருக்கு 15 ரூபாயும் இருசக்கர வாகனத்திற்கு 30 ரூபாய் என வசூலித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு சேலம் மாவட்டம் கொளத்தூர் BDO அலுவலகத்தில் டெண்டர் விடப்பட்டது. இந்த நிலையில் ஒரு நபருக்கு 20 ரூபாயும் இருசக்கர வாகனத்திற்கு 40 ரூபாயும் என கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கப்படுவதால் சுற்றுவட்டார பகுதிகளான ஏரியூர் ,நாகமரை , ஒட்டனூர், வத்தலாபுரம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் நாள்தோறும் படகு மூலம் எதிர் கரையில் உள்ள கொளத்தூர் வழியாக சேலம் மாவட்டத்திற்கு வேலைக்கு செல்லவும் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இவ்வழியாக தான் இரு நேரமும் பயணம் செய்து சென்று வருகிறாா்கள்.
இந்த கட்டண உயர்வால் மன உளைச்சலுக்கு ஆளாகுவதுடன் தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு செல்லும் மக்கள் வருமானத்தின் பெறும் பகுதியினை பயணத்திலேயே இழக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் .
மேலும் இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தாலும் குற்றச்சாட்டு வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று ஏரியூர் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஏரியூர் காவல்துறையினர் மற்றும் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்படாத மக்கள் BDO வரும் வரை சாலை மறியலை தொடர்ந்தனர்.
இதனை அறிந்த ஏரியூர் BDO சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதில் வருகின்ற பத்தாம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனையை சரி செய்வதாக உறுதி அளித்தனர். அதன் பின்னரே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!