கூலி படக்குழு ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாகிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் சந்தீப் கிஷன், ரெபா மோனிகா ஜான் ஆகியோரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக படக்குழு ஜெய்பூருக்கு சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஏற்கனவே வெளியான தகவலின் படி பாலிவுட் நடிகர் அமீர்கான் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். தற்போது இவர் ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் இணையாய் இருக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.