“அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்” என்ற நூலை நேற்று தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். அதை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார். அந்த மேடையில் பேசிய ஆதவ் அர்ஜூன், மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்படும் என்று திமுகவை நேரடியாக விமர்சனம் செய்தார். விசிக தலைவர் தொல். திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அவருடைய எண்ணம் முழுவதும் இங்கேதான் இருக்கும் என்று பேசினார். அவரை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பேசும்போது கூட்டணி தயவில் இருக்கும் ஆளும் கட்சி 2026 தேர்தலில் 200 சீட் பிடிப்போம் என்று திமுக பேசுகிறது. விரைவில் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வருவார் என்று பேசினார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட தவெக தலைவர் விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து ‘அழைப்பு’ விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதையெல்லாம் பார்க்கும் எவரும், நடிகர் ரஜினிகாந்த் அவர்களை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் தற்போது விஜய் அவர்களைக் கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள் .
‘விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே’ என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துரு அவர்களிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.