Homeசெய்திகள்கட்டுரைவிஜய் கையால் விருது பெற்றது அருவெறுப்பாக இருந்தது... அம்பேத்கரிய செயற்பாட்டாளர் மதூர் சத்யா விளாசல்!

விஜய் கையால் விருது பெற்றது அருவெறுப்பாக இருந்தது… அம்பேத்கரிய செயற்பாட்டாளர் மதூர் சத்யா விளாசல்!

-

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தங்களது அரசியல் கணக்குகளை தீர்க்க பயன்படுத்திக் கொண்டதாக, அம்பேத்கரிய செயல்பாட்டாளர் மதூர் சத்தியா குற்றம்சாட்டியுளார்.

விகடன் பிரசுரம்  வெளியிட்டுள்ள எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூலில், பிரபல அம்பேத்கரிய செயற்பாட்டாளர் மதூர் சத்யாவின் படைப்பும் இடம் பெற்றுள்ளது. இதனையொட்டி சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவின்போது, மதூர் சத்தியாவுக்கு, தவெக தலைவர் விஜய் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தங்களது அரசியல் கணக்குகளை தீர்க்க பயன்படுத்திக் கொண்டதாக மதூர் சத்தியா பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூலை, அம்பேத்கரின் வரலாற்றை புதிய கோணத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று எழுதியிருந்தோம். ஆனால் நூல் வெளியீட்டு விழாவில் விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோரது பேச்சை கேட்ட பின்னர் விருது பெற்றது அருவெறுப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியின் நாயகன் விஜய் அல்ல, கம்யூனிச அம்பேத்கரிய தலைவரான ஆனந்த் டெல்டும்டே தான். ஆனால் விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோரது பேச்சு என்பது அம்பேத்கருக்கு முற்றிலும் எதிரானது. விழாவில் புத்தகம் குறித்து எவ்வளவு நேரம் பேசினார்கள். அவர்களது தேர்தல் அரசியல் கணக்குகளை குறித்து எவ்வளவு நேரம் பேசினர். அதனை பார்க்கும்போது விஜய் படத்தில் அம்பேத்கர் கேமியோ ரோல் செய்வது போல் இருந்தது. ஒரு அம்பேத்கரியவாதியாக அவரது கையில் விருது பெற்றது அருவெறுப்பாக இருந்தது. இதனால் அந்த நூலினை தொகுத்தவர்கள், பங்களித்தவர்கள் என அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் நீதிபதி சந்துரு தனக்கு வழங்கப்பட்ட நேரத்தில் மிகச் சிறப்பாக அரசியல் அமைப்பு சட்டம் குறித்து பேசினார். ஆனால் ஆதவ் அர்ஜுனா, விஜய் தங்களது அரசியல் கணக்கை தீர்க்க வந்திருந்தனர். 40 ஆண்டுகளாக அம்பேத்கரிய களத்தில் வேலை பார்த்தவர்கள் முன்பாக ஆதவ் சொல்கிறார், அமைச்சர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டது, விஜய்க்கு கிடைத்த வெற்றி என்று. இது அவர்களை அவமதிக்கும் செயலாகும். அவர்கள் எவ்வளவு தியாகம் செய்து மக்களிடம் அம்பேத்கரை கொண்டு சேர்த்துள்ளனர்.

நீங்கள் போன மாதம் கட்அவுட் வைத்ததால்தான் அமைச்சர்கள் மாலை போட்டார்களா?. கடந்த 2021ல் ஆட்சிக்கு வந்த திமுக அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஐ சமத்துவநாளாக அறிவித்தது. இது விசிக, அம்பேத்கரிய இயக்கங்கள் வழங்கிய உழைப்பால் கிடைத்து. சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக பா.ரஞ்சித் அம்பேத்கரை கொண்டு சேர்த்துள்ளார். அம்பேத்கரிய கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த ஜெய்பீம் படத்திற்காக இயக்குநர் ஞானவேலை கொண்டாடினோம்.

ஆதவ் அர்ஜுனா தேர்தலில் அம்பேத்கர் தோற்றார். அதனால் அவரை போன்று யாரும் தோற்க கூடாது என போராடுவதாக கூறுகிறார். ஆனால் அம்பேத்கர் என்ன சொன்னார், என்ன செய்தார் என்ற மேடையில் அவர் பேசவில்லை. ஆனால் ஆதவ் அர்ஜுனா கடந்த 2019 தேர்தலில் திமுகவுக்காக வேலை பார்த்தவர். 2024 மக்களவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேலை பார்த்தவன் என ஸ்லைடு போட்டு வீடியோ காட்டுகிறார். ஏன் 2023ஆம் ஆண்டு இறுதிவரை அவருக்கு திமுகவுடன் பிரச்சினை இல்லை. 2024 தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்காததால் திமுக தலித் விரோதமான கட்சி என்று குற்றம்சாட்டுகிறீர்கள்.

விஜய், தலித் மக்களின் அன்றாட பிரச்சினைகள் குறித்து பேசாமல்  வேங்கை வயல் போன்ற பரபரப்பான விஷயங்களை மட்டும் வைத்து தலித்துக்களை வாக்கு அரசியலுக்கு பகடைக்காயாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். வேங்கை வயல் குறித்து பேசும் விஜய் அந்த சம்பவம் நடைபெற்றபோது எங்கே இருந்தார்?. கட்சி தொடங்க உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிக்கை விட்ட விஜய், அதன் பின்னர் நடைபெற்ற சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், முத்தமிழ் முருகன் மாநாடு, கள்ளக்குறிச்சி மரணம் போன்ற எந்த விவகாரத்திற்காக கருத்து தெரிவித்துள்ளரா?.

விஜய் திமுகவை எதிர்ப்பது பிரச்சினை இல்லை. அதையும் ட்விட்டரில் பண்ணிக்கொண்டு ஒரு பாவ்லா காட்டிக்கொண்டு அம்பேத்கரை பகடைக்காய் ஆக்காதீர்கள். அம்பேத்கரை வைத்து திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் நிறைய விமர்சனங்கள் உள்ளன. அத்பேத்கரிய பார்வையாளர்கள் எத்தனை பேர் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். அதன் மூலம் திமுக நடவடிக்கை எடுக்கிறது. அதனை அவர்கள் கொண்டாடுகின்றனர். நீங்கள் அப்படி செய்யவில்லை. தலித் மக்களை ஷோபீசாக வைத்து போட்டோ ஆப் தான் நடத்துகிறீர்கள். நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என திருமா அறிக்கை விட்டிருந்த நிலையில், மேடையில் பேசிய விஜய், திருமாவின் மனம் இங்கே தான் இருக்கும் என கூறுகிறார். இது திருமாவளவனை அவமதிக்கும் செயலாகும்.

Aadhav Arjuna - Thirumavalavan

40 ஆண்டுகாளாக அம்பேத்கரியத்தை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் திருமா, கொள்கைக்காக பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர், எம்எல்ஏ பதவியையே ராஜினாமா செய்த திருமா, அதனை நிருபிக்க இந்த நிகழ்ச்சியில் தீக்குளிக்க வேண்டுமா?. ஒரு மாதத்திற்கு முன்பு கட்அவுட் வைத்ததால் நீங்கள் அம்பேத்கரின் வாரிசு ஆகிவிட்டீர்களா? அம்பேத்கர் உங்களுக்கு ஒரு இமேஜ் அவ்வளவுதான்.திருமா அவரை உள்வாங்கி அதன் வழியாக வாழ்ந்து வருகிறார். அமைப்பாய் திரள்வோம் என்ற கட்டுரை உள்ளது. அதில் ஒன்றைக்கூட உங்களால் படிக்க முடியாது.

ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் என திமுகவை எதிர்க்க எதை வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் எதையும் அம்பேத்கருடன் தொடர்பு படுத்தாதீர்கள். சாதி ஒழிப்பு பற்றி பேசும் நீங்கள் அதற்காக செயல்திட்டம் எதையும் வைத்துள்ளீர்களா?. ஏனென்றால் யாராவது எழுதி கொடுத்ததை வந்து மேடையில் படிக்கின்றீர்கள். உங்களுக்கு அம்பேத்கர் யார், அவர் என்ன எழுதினார் என்று கூட தெரியாது. நீங்கள் திருமா நிகழ்ச்சியில் பங்கேற்க அந்த சிக்கல், இந்த சிக்கல் என கூறலாமா?.

ஊழலை ஒழிப்பு பற்றி பேசும் ஆதவ் அர்ஜுனாவின் மாமனார் மார்ட்டின், தேர்தல் பத்திர விவகாரத்தில் பல ஆயிரம் கோடி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அப்படி எனில் அவரையும் கைது செய்யலாமா?. தனியுரிமை என்ற ஒன்று உள்ளவரை வாரிசு அரசியலை எதிர்க்க முடியாது. எனவே கம்யூனிச வழியில் எதிர்த்து போராட விஜய் தயாரா என்றால் இல்லை. ஏனினெனில் அது அவருக்கு தான் பாதிப்பை தரும். எனவே சொகுசாக டிவிட்டரில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் திமுகவை எதிர்த்து மக்களை ஏமாற்றுகிறார். அத்துடன், அம்பேத்கர் என்ற நீலசாயம் பூசி அருவெறுப்பான பொருளை விற்பனை செய்ய முயற்சிக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா 2014 மோடி கையாண்ட உத்தியை, விஜயும் கையில் எடுக்க வேண்டும் என கூறுகிறார். அதாவது மோடியை போன்ற ஆட்சியை தர வேண்டும் என கூறுகிறார். அரசியலமைப்பு சட்டம், பெண்கள் சமத்துவத்தை எதிர்க்கும் மகா பெரியவரை மிகவும் நல்லவர் என்று கூறுகிறார். முழுக்க முழுக்க அம்பேத்கருக்கு எதிராக பேசிவிட்டு உங்களை அம்பேத்கரிய வாதி என்று சொல்லிக்கொண்டு ஏமாற்றுகிறீர்கள். அதை நாங்கள் கேட்க வேண்டுமா?, இவ்வவாறு அவர் தெரிவித்தார்.

MUST READ