கும்மிடிப்பூண்டியில் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் காண்பித்து உதவுமாறு கூறி கடையில் இருந்து 2 செல்போன்களை லாவகமாக திருடிய நபரின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல். காவல்துறை விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த தனசேகர் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது கடையில் பணியாற்றும் ஊழியர்கள் வியாபாரத்தை கவனித்து வந்த போது கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் மாற்றுத்திறனாளி என சான்றிதழை காண்பித்துள்ளார். தனக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது என்ற சான்றிதழை காண்பித்து தனக்கு உதவி செய்யுமாறு கடை ஊழியர்களிடம் கேட்டுள்ளார். கடை ஊழியர்கள் அவரிடம் சான்றிதழை பார்த்து பணம் கொடுக்க முடியாது என பேசி கொண்டிருந்துள்ளனர். அப்போது சான்றிதழை கடையின் மேசை மீது வைத்து காண்பிப்பது போல வைத்து அங்கிருந்த இருந்த 2 செல்போன்களை லாவகமாக திருடிக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனசேகர் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாற்றுத்திறனாளி எனக் கூறி கடையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மருந்தகத்தில் கடை ஊழியர்களிடம் லாவகமாக செல்போன்களை திருடும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.