Homeசெய்திகள்அரசியல்'தமிழ்நாட்டுக்கு அதிமுக தொடர்ந்து துரோகம் செய்யும்' - வன்னி அரசு

‘தமிழ்நாட்டுக்கு அதிமுக தொடர்ந்து துரோகம் செய்யும்’ – வன்னி அரசு

-

 'தமிழ்நாட்டுக்கு அதிமுக தொடர்ந்து துரோகம் செய்யும்' -  வன்னி அரசுதமிழ்நாட்டுக்கு  அதிமுக தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது என்று விசிக பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தில்லி அரசின் அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்ய தில்லி அரசுக்கே அதிகாரம் இருப்பதாக கடந்த ஏப்ரல் 2023 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை நீர்த்துப்போகச்செய்யும் வகையில், தில்லி நிர்வாக திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்த மசோதா கடந்த 1-ம் தேதி மக்களவையிலும், 7-ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை ஆதரித்து வாக்களித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் அதிர்ச்சியானது. “அமித்ஷாவுக்காக வாக்களித்தேன்” என்பது தான்.

பாஜக கொண்டு வந்த தில்லி நிர்வாக சீர்திருத்த மசோதா என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது. மாநில சுயாட்சி பேசிய பேரறிஞர் அண்ணா பெயரை வைத்துக்கொண்ட அதிமுக மாநில உரிமைகளுக்கு எதிராக பேசியது. அதே போலத்தான் கனிம வள திருத்தச்சட்டம் 2023 விவாதங்களுக்கு வந்த போது, அச்சட்டத்தை ஆதரித்து வாக்களித்தவர் அதிமுக தம்பிதுரை.

இச்சட்டம் என்ன சொல்லுகிறது?

கனிம வளங்கள் தொடர்பான உரிமை மாநிலங்களுக்கு இல்லை என்றும் ஒன்றிய அரசுக்கே அந்த அதிகாரம் என்பது தான். மாநில அரசிடம் முன் அனுமதியில்லாமல் தனியாருக்கு அதாவது, வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிம வளங்களை கொள்ளையடிக்க அனுமதி கொடுக்கவே இச்சட்டத்தை திருத்தம் செய்துள்ளது.

இச்சட்டத்தின் படி, இந்திய ஒன்றியத்தின் அத்தனை மாநிலங்களிலும் மாநில அரசின் அனுமதி இல்லாமலே கனிம வளங்களை கொள்ளயடிக்கலாம். அந்த அடிப்படையில் தான் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் நாயக்கர் பட்டி,அரிட்டாபட்டி ஆகிய பகுதிகளில் டங்ஸ்டன் உள்ளிட்ட கனிம வளங்களை கொள்ளயடிக்க ஒன்றிய பாஜக அரசு, வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கியது.

மாநில அரசிடம் கேட்காமலே அனுமதி வழங்கப்பட்டிருப்பதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் கனிம வள திருத்தச்சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களித்தது தான் காரணம். இச்சூழலில், தமிழ்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில், நேற்று (9.12.2024) சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் வரலாற்றுச்சிறப்பு மிக்கது. வரவேற்புக்குரியது. தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் மாநில உரிமைகளுக்கு இரண்டகம் செய்யும் அதிமுகவின் நாடகப் போக்கு கண்டிக்கத்தக்கது. தூத்துக்குடியில் இதே வேதாந்தா நிறுவனத்தோடு இணைந்து தான் 13 அப்பாவிகளை சுட்டுக்கொன்றது அதிமுக அரசு.

இப்போது மதுரை மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கத்துடிக்கும் அதிமுகவை மக்கள் புறக்கணிப்பது உறுதி! என்று அவர் கூறியுள்ளார்.

தாறுமாறாக ஓடிய பேருந்து மோதி விபத்து… 7 பேர் பலி, 49 பேர் காயம்… விபத்துக்கு யார் பொறுப்பு?

 

MUST READ