திமுகவுக்கு இளம் வாக்காளர்களின் வாக்குகள் செல்வதை தடுக்கவே விஜயை அரசியலுக்கு கொண்டுவந்துள்ளதாக பத்திரிகையாளர் ஜுபைர் ஜமால் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் விஜய் அரசியலுக்கு வந்ததற்கான காரணங்கள் குறித்து பத்திரிகையாளர் சுபைர் ஜமால் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆன ஆதவ் அர்ஜுனா, 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தலுக்கு வர நான்தான் காரணம் என கூறுகிறார். ஆனால் நீங்கள் லாட்டரி விற்பனைக்கு அனுமதி கோரிய நிலையில் அதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் திமுக மீது உங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி. 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த மன்னராட்சியை கொண்டுவர நீங்கள் தானே முயற்சி செய்தீர்கள். ஏன் 6 மாதங்களுக்கு முன்பு கூட திமுகவுக்கு தான் வேலை செய்தீர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக உங்களுக்கு சீட் தரவில்லை. உங்களை பற்றி தெரிந்ததால் தான் என்னவோ அவர்கள் சீட் தரவில்லை. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை நான்தான் அழைத்து வந்தேன் என கூறுகிறார். அதே பிரசாந்த் கிஷோர் சொந்த கட்சி தொடங்கி தனது சொந்த மாநிலத்தில் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார்.
வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பின் சார்பில் வீடியோ ஒன்றை ஆதவ் வெளியிட்டுள்ளார். அரசியல் இயக்கத்திற்கு இது தான் முகவரியா?- அரசியல் என்பது களத்திற்கு செல்ல வேண்டும். செயல்பாடுகள் இருக்க வேண்டும். வலிமையான கொள்கைகளுடன் உறுதியோடு இருக்க வேண்டும். சரி ஆதவ் அர்ஜுனா ஒரு அரசியல் கட்சிக்கு சென்றார். 6 மாதத்திற்கு முன்பு வந்தவருக்கு துணை பொதுச் செயலாளர் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஆனால் மதுஒழிப்பு மாநாட்டில் தன்னுடைய கம்பெனியை முன்னிலைப்படுத்தும் வேலையை அவர் செய்துள்ளார். கட்சிக்குள்ளேயே தனியாக ஒரு அமைப்பை உருவாக்க முயற்சித்துள்ளார். அவரது தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக ஒரு ஆட்சியின் மீது, கட்சியின் தாக்குதல் நடத்தியுள்ளார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை பயன்படுத்தி உள்ளார். வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் அமைப்பை நடத்திவரும் ஆதவ், விடுதலை சிறுத்தைகள் கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்வார். படித்த இளைஞர் கட்சிக்கு பயன்படுவார் என்பதால் அவரை திருமா கட்சியில் சேர்த்தார். அவர் திமுகவில் இருந்து வந்தபோது அவரது பின்புலம் திருமாவளவனுக்கு தெரியாமல் இல்லை. அவர் கலைஞர், ஜெயலலிதாவுடன் அரசியல் செய்தவர். தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வருபவர். யார் சகுனி, யார் ஆபத்தானவர் என்று தெரியாதா?
விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் மக்களை சந்திக்க உள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அவர் தனியாக சந்திக்க வாய்ப்பு இல்லை. அவரது எளிய மக்களுக்கு அதிகாரம் மற்றும் விஜயின் அதிகாரத்தில் பங்கு என்பது ஒன்றுதான். எனவே இருவரும் இணைந்து தான் பயணம் மேற்கொள்வார்கள். தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் சமூக வலைதள பிரிவை தற்போது வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பு தான் மேற்கொண்டு வருகிறது. மேலும், விஜய் கட்சி தொடங்க பக்கபலமாக இருந்தவர் ஆதவ் அர்ஜுனா என்ற கருத்தும் உள்ளது. அவர் வெளியே வரட்டும், மக்களை சந்திக்கட்டும், மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்களா என முடிவு செய்வார்கள். ஆதவ் அர்ஜுனா திமுக மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்காகவே விடுதலை சிறத்தைகள் கட்சியை பயன்படுத்தியுள்ளார். அவர் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு கட்சியில் அனைவருக்கும் சமத்துவத்தை கொடுக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு கட்சியில் இருக்கும்போது, கட்சி நிர்வாகம் சொல்வதைதான் கேட்க வேண்டும். கட்சியின் உத்தரவை மீறி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்ட நீங்கள் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், 2 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இது கொள்கை ரீதியாக இணைந்த கூட்டணி. தமிழ்நாட்டில் இன்று மொழிப்பிரச்சினை, கல்வி உரிமை, மாநில உரிமைகள் பறிபோகிறது. இப்படி பல பிரச்சினைகள் உள்ளன. இதனை எதிர்த்து கொள்கை ரீதியில் அமைந்த கூட்டணி திமுக கூட்டணி. அவ்வாறு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு தேவைப்பட்டால் 2 கட்சிகளின் தலைவர்களும் கலந்து பேசி முடிவெடுத்து கொள்வார்கள். இதை பேச ஆதவ் அர்ஜுனா யார். உங்கள் நோக்கம் எளிய மக்களுக்கு ஆட்சி அதிகாரம் என்ற வார்த்தையை வைத்து, கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அந்த கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை கழற்ற வேண்டும் என்பதுதான். அதைத்தான் ஆதவ் அர்ஜுனா பேசுகிறார்.
விஜய் வருகைக்கு பின்னர் அவரை சுற்றியே தமிழக அரசியல் உள்ளதாக கூறப்படுவது உண்மையில்லை. திரைப்பட நடிகர் ஒருவர் அரசியல் கட்சி தொடங்கினால், அவருக்கு இயல்பாகவே ஊடக வெளிச்சம் கிடைக்கும். அதுதான் விஜய் குறித்து பரபரப்பாக பேசப்பட காரணமாகும். அதற்காக அவர்கள் நாட்டை ஆளுவார்கள் என்பது இல்லை. அண்ணாமலை கூட தான் கடந்த 4 ஆண்டுகளாக பரபரப்பாக அரசியல் செய்து வருகிறார். ஆனால் அவரால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. கட்சியும் வளரவிலலை. கள எதார்த்தம் வேறு.
விஜயிடம் என்ன கொள்கை பிடிப்பு உள்ளது. 50 வருடம், திமுக – அதிமுக செய்ததைத்தான் அவரும் சொல்கிறார். விஜய் கொள்கை என்னவென்று தெரியவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மக்களையோ, அல்லது பத்திரிகையாளரையோ அவர் சந்திக்கவில்லை. அப்படி இருக்கும்போது அவரது செயல்பாடுகளை வைத்தே கூட்டணி அமையும். விஜய் அரசியல் கட்சி தொடங்கும்போது, திருமாவளவன் வாழ்த்து கூறினார். ஆனால் அவரது மாநாட்டு பேச்சை கேட்டபின்னர் கடுமையாக விமர்சித்தார். விஜய் அரசியல் புரிதல் இல்லாதவர். இவர் வேறு ஏதோ ஒரு அஜண்டாவுக்காக வேலை செய்கிறார் என தெரிந்துவிட்டது.
விஜய் களத்துக்கு வரட்டும், மக்களை சந்திக்கட்டும், பிரச்சினைகளை பேசட்டும். மணிப்பூர் விவகாரம் குறித்து பேசும் விஜய், அந்த பிரச்சினைக்கு யார் காரணம் என கூறவேண்டும். அம்பேத்கர் மேடையில் அவர் யாரை எதிர்த்தார் என பேச வேண்டும். ஆனால் காஞ்சி மகாபெரியவர் நல்லவர் என்று கூறிகிறார். விஜய் விவகாரத்தில் எல்லாமே முரண் பாடாக உள்ளது. இது விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஒரு அஜெண்டா. தமிழகத்தில் புதிய வாக்காளர்களை, இளம் வாக்காளர்களை விஜயை வைத்து ஸ்பாயில் செய்யக்கூடிய வேலை அவருக்கு கொடுக்கப்பட்ட அஜெண்டா. விஜய்க்கு ஒரு அழுத்தமோ, எதோ ஒரு விஷயம் நடந்துள்ளது. அதை நோக்கித்தான் அவர் போய் கொண்டுள்ளார்.
திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும். ஏன் இன்னொரு கூட்டணியில் உள்ள கட்சியை கழற்றிட வேண்டும் என நினைக்கின்றனர். இதனை கம்யூனிஸ்ட் கட்சிகளிடமோ, காங்கிரசையோ கூப்பிடாமல் ஏன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை மட்டும் கண்ணுக்கு தெரிகிறது. அப்போது உங்களுக்கு வலுவான ஆட்சி அதிகாரம அமைப்பது நோக்கம் இல்லை. மாறாக திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் உங்கள் நோக்கம். ஆனால் திருமாவளவன் 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வேன் அறிவித்துவிட்டார். மேலும் ஆதவ் அர்ஜுனா மீதான நடவடிக்கை என்பது அவர் மீண்டும் விசிகாவுக்கு வரமாட்டார் என்பதையே காட்டுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.