நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியீட்டின் போது ஐதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கிற்கு அதிகாலையில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் வருகை தந்துள்ளார். அப்போது ரசிகர்கள் பலரும் அவரைக் காண திரண்ட நிலையில் ரேவதி என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் திரையரங்க உரிமையாளர் உட்பட மூன்று பேரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து பிரபல நடிகர் அல்லு அர்ஜுனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நடிகர் அல்லு அர்ஜுன் தரப்பில், அல்லு அர்ஜுன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப் ஐ ஆரை ரத்து செய்யக் கோரியும் திங்கட்கிழமை (டிசம்பர் 16) வரை கைது நடவடிக்கை வேண்டாம் எனவும் உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் சஞ்சல்குடா சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.