அதிமுக தொண்டர்களின் மனதை சோர்வடைய செய்வதற்காக பல்வேறு தவறான தகவல்கள் பரப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த பொதுக்குழு ஓரு முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்குழுவாகும். இந்த மண்டபம் அதிமுவில் பல்வேறு திருப்பங்களை கண்ட மண்டபமாகும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இயக்கம், அரசு இருக்குமா? இருக்காதா என்ற அச்சம் நிலவியது. அந்த இக்கட்டான சூழ்நிலையில், சோதனையான காலகட்டத்தில் இந்த இயக்கத்தை வழிநடத்துகின்ற பொறுப்பை, தொண்டராக இருந்து இன்று தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஆட்சியை முதலமைச்சராக பொறுப்பேற்று 4.5 ஆண்டுகள் ஒரு சிறப்பான ஆட்சியை வழங்கினார். ஏழை, எளிய மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களுடைய கஷ்டங்களை புரிந்துகொண்டு உடனுக்குடன் நிவாரணங்களை கொடுத்து சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசு எடப்பாடியாரின் அரசு.
அதிமுக எதிரிகள் மட்டும் அல்ல துரோகிகளாலும் கடந்த 7.5 ஆண்டு காலமாக பல்வேறு கஷ்டங்களை சந்தித்தது. அதிமுக தற்போது 53வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த 53 ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளை இந்த இயக்கம் சந்தித்து உள்ளது. அதிமுக சின்னம் முடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் சந்திக்காத சோதனைகளை இந்த 7.5 ஆண்டுகாலத்தில் அதிமுக சந்தித்துள்ளது. ஆனாலும் எவ்வித சேதாரமும் இல்லாமல் எஃகு கோட்டையாக அதிமுக இன்று ஸ்ரீவாரு மண்டபத்தில் இருக்கிறது என்றால், அதற்கு காரணம் ஆளுமை மிக்க நமது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். அவரை கொண்டுவந்த அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தான். இதே அரங்கில்தான் எடப்பாடியாரை பொதுச் செயலாளராக தேர்வு செய்தோம். அன்றில் இருந்து இன்று வரை எத்தனை சோதனைகள்.
நம்மை தோற்கடிக்க எவரும் இல்லை. தோற்கடிக்க முடியாது. நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அதனை சீர்குலைக்கத்தான் பத்திரிகை, ஊடகங்கள் மூலம் நம் மீது மறைமுகமாகவும், நேரடியாகவும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இதனை நாம் ஓரங்கட்ட வேண்டும். ஊடகத்தை நம்பி அதிமுக இல்லை. 2 கோடி தொண்டர்களை நம்பி இருக்கும் இயக்கம் அதிமுக. அன்று எடப்பாடியாரை பொதுச் செயலாளராக தேர்வு செய்தபோது இருந்த அதே எழுச்சியும், ஆரவாரமும் தற்போதும் உள்ளது. கருத்து வேறுபாடு, சலசலப்பு எங்கு உள்ளது. இதனை எதிர்பார்த்து இருப்பவர்கள் இங்கிருக்கும் எழுச்சியே பதில் அளிக்கும். 2026ல் ஜெயலலிதாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமையும் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும்.
ஊடக செய்திகள் வாயிலாக நம்மை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தப் பார்க்கிறார்கள். நம்முடைய பலம் நமக்கு தெரிகிறதோ இல்லையோ, திமுகவுக்கு நன்றாக தெரியும். அதிமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை 100 கருணாநிதிகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் தான் தொண்டர்களின் மனதை சோர்வடைய செய்வதற்காக பல்வேறு தவறான தகவல்கள் பரவி கொண்டிருக்கிறது. இதனை எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே அதிமுக மக்களை நம்பி மக்களுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் இயக்கம்.
இன்றைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு கண்டுகொண்டிருக்கிறார். அதிமுகவை அழித்து விடலாம், வழக்குகளை போடலாம், கைது செய்து விடலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறார். 6 மாதங்களுக்கு முன்பு இலங்கையில் ராஜபக்சே குடும்பம் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த நிலையில், மக்கள் போராட்டம் மூலம் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றினர். வங்கதேசத்தில் ஷேக்ஹசினா குடும்ப ஆட்சி நடத்தினார். எதிர்க்கட்சிகளை இல்லாமல் செய்துவிடுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டுள்ள, கனவு கண்டுகொண்டிருக்கின்ற ஸ்டாலின் அவர்களே, அங்கே இதே நிலைமை தான். முன்னாள் பிரதமரை கைதுசெய்து சிறையில் அடைத்து விட்டு எதிர்க்கட்சிகளே இல்லாமல் தேர்தலை நடத்தியவரின் இன்றைய நிலைமை என்ன? சிரியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட ஆசாத் குடும்பம் வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டது. அத்தகைய எழுச்சி தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிட்டது. அதன் அடையாளமாகத்தான் உங்கள் மீது சேறு வீசப்பட்டது.
இன்றைக்கும் தமிழ்நாட்டை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிசெய்து கொண்டிருக்கிறார். புயல் வருகிறது, அது மரக்காணத்தில் கரையை கடக்கும் என்று கூறினார்கள். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கு இருந்தார். மழையே இல்லாத சென்னையில் படம் காட்டிக்கொண்டிருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்த பிறகுதான், அவர் விழுப்புரத்திற்கு வருகை தந்தார். அங்கு வந்து மக்களை சந்தித்தாரா? ஒரு கல்யாண மண்டபத்தில் உட்கார வைத்து பார்த்துவிட்டு போனார். மக்களை சந்திக்க எப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது அஞ்சினாரோ அப்போதே அவர் தோற்றுவிட்டார். அதிமுக ஜெயித்துவிட்டது.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஜெயலலிதாவின் அரசு எடப்பாடியார் தலைமையில் அமைய வேண்டும் என்றால் அனைவரும் ஒற்றுமையாக, எழுச்சியோடு செயல்பட வேண்டும். எல்லோரும் கேட்பது கூட்டணி தான். 2001 சட்டமன்ற தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு கூட்டணி வந்ததா? தேர்தலுக்கு 10 நாட்கள் முன்பு தான் கூட்டணி அமைந்தது. இவர் வருவரா, அவர் வருவாரா என எதிர்பார்த்தோம். ஆனால் கடையில் அனைவரும் கூட்டணிக்கு வந்தனர். மிகப்பெரிய ஒரு கூட்டணி, மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்றுத்தந்தனர். 2011 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி எப்போது அமைந்தது? தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்புதான் மிகப்பெரிய கூட்டணி அமைந்தது. ஆகவே கூட்டணி வரும். அதை பொதுச்செயலாளர் எடப்பாடியார் பார்த்துக்கொள்வார்.
கூட்டணி கண்டிப்பாக அமையும். நாம் அமைக்கிறோமோ இல்லையோ, மு.க.ஸ்டாலின் அமைத்து கொடுத்து விடுவார். காலம் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றிக்கூட்டணியை அமைத்துத் தரும். எப்போதெல்லாம் அதிமுக சட்டமன்ற தேர்தலில் தோற்கிறதோ, அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். அந்த நம்பிக்கையோடு தேர்தல் பணியாற்றி ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் அமைக்க போராடுவோம் , இவ்வாறு அவர் தெரிவித்தனர்.