ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கூட்டணிக்கு வந்துவிடும் என்ற நடிகர் விஜயின் பேச்சு பாசிசமானது என்றது அக்கட்சி எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

வாய்ஸ் ஆப் காமன் அமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜுனா அமைச்சர் எ.வ.வேலு, திருமாவளவனை சந்தித்து விகடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என அழுத்தம் கொடுத்ததாக புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து விசிகவின் துணை பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி பிரபல யூடியூப் செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை, அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து விகடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். அவர் பேசியபோது ஆதவ் அர்ஜுன் அருகில் இருந்தாரா?. அவர் பேசியது ஆதவுக்கு தெரியுமா?. நான் அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பணத்தை வாங்கிக்கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார் என்றால் நம்புவீர்களா? அவரது பேச்சுக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருட்படுத்தியது இல்லை.
வெளிச்சநத்தம் பிரச்சினை எப்போது ஆதவ் அர்ஜுனாவின் கவனத்திற்கு வந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பொறுப்பேற்ற பின்னர் தனிப்பட்ட முறையில் மற்ற கட்சி தலைவர்களை சந்திப்பது வழக்கம் இல்லை. ஆனால் ஆதவ் அர்ஜுனா சென்று பார்த்துவிட்டு வந்தார். நாடாளுமன்றத் தேர்தலின் போது அவருக்கு சீட் தர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டபோது, திமுக மீதான குற்றச்சாட்டுகள் தெரியவில்லையா?. வெளிச்சநத்தம் பிரச்சினையில் முதலில் கொடி ஏற்ற அனுமதியில்லை என்றனர். பின்னர் எதுவும் சொல்லாத நிலையில் திருமாவளவன் கொடி ஏற்றிவிட்டு வந்தார். பின்னர் அரசு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டபோது தான் பிரச்சினை தெரியவருகிறது. திருமாவளவன் அரசிடமும், நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து, விசிக சட்டமன்ற தலைவர் சிந்தனைச் செல்வன் அரசிடம் கோரிக்கை வைத்தார்.
இதனை தொடர்ந்து, நான் தமிழகத்தில் கட்சி கொடி ஏற்றுவதற்கு அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட வலியுறுத்தி தமிழக காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அரசு அதிகாரிகள் சமுதாய கண்ணோட்டத்தோடு நடடிவக்கை எடுத்தால், அந்த பொறுப்பு தமிழக அரசு மீது தான் விழும் என்றும், ஏற்கனவே திமுக கூட்டணியில் விசிக உள்ளதால் கூட்டணியை சிதைக்க முயற்சி மேற்கொள்ளும் அபாயம் உள்ளதால் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
என் மீதும், ஆளுர் ஷாநவாஸ், சிந்தனைச்செல்வன் மீதும் ஏராளமான வழக்குகள் உள்ளன. நாங்கள் திமுகவிடம் சொல்லி சீட் தருவார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வரவில்லை. திமுக கூட்டணியை எதிர்த்து 2016ல் களம் கண்டவர்கள் நாங்கள். விகடன் மாநாட்டில் பங்கேற்பது குறித்து திருமாவளவன் முடிவு எடுத்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்து அவர் அறிக்கையும் வெளியிட்டுள்ளார். திமுக கூட்டணியில் தொடர்வதாக இன்று திருமாவளன் அறிவித்துள்ளார். அவர் எடுக்கும் முடிவின்படி நான் திமுகவை தான் ஆதரிப்பேன்.
ஆதவ் அர்ஜுனாவின் பின்னணியில் உள்ளது என்ன என்பது எனக்கு தெரியவில்லை. அவர் குறித்து ஊடகங்கள் கட்டமைப்பது எல்லாம் காட்சிப்பிழைதான். அவரது பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுப்பு தெரிவித்து பதில் அளித்துக் கொண்டிருந்தால் நாங்கள் எங்களது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியது ஆகும். மேலும் அவருக்கு அதீத முக்கியத்துவத்தை வழங்கவிரும்பவில்லை. தேர்தலில் விசிகவுக்கு எத்தனை இடங்கள் வாங்குவது என்பது குறித்து திருமாவளவன் பேசிக் கொள்வார்கள். தலித் வாக்கு சதவீதம் அதிகமாக உள்ளதாக குறிப்பிடும் ஆதவ் அர்ஜுனா, 2021ல் திமுகவை ஆட்சிக்கு கொண்டுவந்ததாக கூறிக்கொள்ளும் அவர், ஏன் விசிகவுக்கு 4 இடங்களை கூடுதலாக வழங்க சொல்லி இருக்கலாமே.
விகடன் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், திருமாவளவனை போன்று அம்பேத்கர் கொள்கையை ஏற்றுக்கொண்டு அரசியலுக்கு வந்துள்ளேன். எனது கட்சியின் கடைசி தொண்டர் வரை அம்பேத்கரின் கொள்கையை கடைபிடிப்பார்கள் என உறுதி அளிப்பதாக கூறி அழைப்பு விடுத்திருந்தால் என்றால் அதில் ஒரு அடிப்படை உள்ளது. ஆனால் கொச்சை படுத்துவது போல ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என்று கூறி அழைக்கிறார். ஆட்சி அதிகாரம் முக்கியம் தான். ஆனால் நாங்கள் யாரும் பதவியில் இல்லாவிட்டாலும் கூட கடைகோடியில் இருக்கும் பாரம மக்களுக்கு அவர்களுக்கான நிலை உறுதி செய்யப்படுவது தான் முக்கியம். விஜய் அப்படி கூப்பிடவில்லை. ஆட்சி அதிகாரம் தான் முக்கியம் என்றால் நாங்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்திருக்க மாட்டோமா?. கட்சி என்பதை விட சமுதாயத்திற்காகத்தான் கேட்கிறோம்.
பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவர் ஜனாதிபதி ஆகிவிட்டால், அந்த சமுதாயம் பலன் அடைந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. விஜய் மாநாட்டில் போகிற போக்கில் வந்துவிட்டு, அரசியல் அணுகுண்டு போடுவதாக ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என கூறிகிறார். இப்படி கூறினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் எதையும் யோசிக்காமல் கூட்டணிக்கு வந்துவிடுவார் என்ற இந்த எண்ணம்தான் பாசிசம். ஆதவ் அர்ஜுனா திமுகவை எதிர்ப்பது பிரச்சினை இல்லை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி இங்குதான் வரவேண்டும் என கூறுவது தவறு. அவர் மேலே சர்க்கரையை தடவி விஷத்தை உள்ளே வைத்து பேசுகிறார். திருமாவளவனை மிகப்பெரிய ஆளுமை என்று புகழ்ந்து பேசிவிட்டு, திமுகவின் அழுத்தத்திற்கு உடன்பட்டார் என கூறுவது அவரது தலைமைப் பண்பை கொச்சைப்படுத்தும் செயலாகும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.