போக்குவரத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட குற்றம் சாட்டப்பட்ட 145பேர் சென்னை எம்பி ,எம் எல் ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
கடந்த 2011- 15ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் 2,222 பேர் குற்றம் சட்டப்பட்டவர்களாக சேர்ககப்பட்டிருந்தனர். இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஆஜராகி வந்த நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2,222 பேரில் 150 பேர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம் பி , எம் எல் ஏக்கள் எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 145 பேர் நேரில் ஆஜராகி இருந்தனர். அப்போது அனைவரும் தங்கள் தரப்புக்கு வாதாட வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் 150 பேர் வரும் ஜனவரி மாதம் 6,7, 8 ம் தேதிகளில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜனவரி 9 ம் தேதிக்கு தள்ளி வைத்தாா்.