பார்சல் கட்ட தாமதம்- ஹோட்டல் முதலாளியின் விரலை கடித்து துப்பிய நபர்
பார்சல் கட்டுவதில் தாமதம் ஹோட்டல் முதலாளியின் விரலை கடித்து துப்பிய நபர் தப்பி ஓடிய சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு கலைச்செல்வி ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலில் சாப்பாடு பார்சல் வாங்க வந்த முஸ்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்டான் என்பவர் சாப்பாடு பார்சல் வேகமாக கட்டுமாறு கூறியுள்ளார். மற்றவர்களுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த உரிமையாளர் கதிரேசன், சிறிது நேரம் ஆகும் என்று கூறியதை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வழிவிட்டான் சாம்பார் கரண்டியினால் கதிரேசனை தாக்கியுள்ளார். இதனை அடுத்து இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதில் கதிரேசனின் இடது ஆள்காட்டி விரலை மேல் பகுதியை முழுவதுமாக கடித்து கடை முன்பு இருந்த சாக்கடையில் துப்பி விட்டு வழிவிட்டான் ஓட்டம் பிடித்தார். உடனடியாக கமுதி அரசு மருத்துவமனையில் கதிரேசன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். துண்டான ஆள்காட்டி விரலின் மேல் பகுதி தேடி பார்த்ததில் கிடைக்கவில்லை. இது குறித்து கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து வழிவிட்டானை தேடி வருகின்றனர்.