Homeசெய்திகள்கட்டுரைஅதிபர் ஆட்சி முறையை கொண்டுவர பாஜக சூழ்ச்சி... பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் எச்சரிக்கை!

அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர பாஜக சூழ்ச்சி… பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் எச்சரிக்கை!

-

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை ஆதரிப்பது தொடர்பாக அதிமுக, பா.ம.க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் பிரபல யூடியூப் சேனலுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: – ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா என்பது புதிய விஷயம் ஒன்றும் அல்ல. பாஜகவின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக உள்ளது தான். ஒரே தேசம், ஒரே மொழி, பொதுசிவில் சட்டம் என்ற வரிசையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமும் ஒன்றாகும். ஒரே நேரத்தில் மக்களவை, மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவதால், தேர்தல் செலவுகளை மிச்சப்படுத்தலாம், நடத்தை விதிகள் காரணமாக பல மாதங்களாக திட்டங்கள் முடங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என பாஜக கூறுவது உண்மை தான். அதை தாண்டி இந்த திட்டத்தால் வேறு எந்த பயனும் கிடையாது. மாறாக ஆபத்து தான் உள்ளது.

"ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா" - நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்ப ஒப்புதல்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 129-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் 2 முக்கிய விஷயங்களை சொல்கின்றனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறும். இதில் மக்களவை தேர்தலுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மக்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் முதல் கூட்டம் என்று நடைபெறுகிறதோ அது தான் ஆட்சிகாலத்தின் தொடக்கம். ஆனால் இதில் பிரச்சினை எங்கே தொடங்குகிறது என்றால் ஒரு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்த இயலாது என இந்திய தேர்தல் ஆணையம் கருதினால்,  அந்த பின்னணியை விளக்கி குடியரசுத்தலைவருக்கு கடிதம் அனுப்பினால், அவர் எப்போது தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்வார். ஓரிடத்தில் மக்களவைத் தேர்தல் நடத்த சூழல் உள்ளபோது, சட்டமன்ற தேர்தல் நடத்த சூழல் இல்லை என்று கூறுகின்றனர் என்றால் இது ஏமாற்று வேலை இல்லையா?

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018ஆம் ஆண்டு பிடிபி – பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றபோது, அங்கு சட்டமன்ற தேர்தலை நடத்தியிருக்கலாம். ஆனால் சட்டமன்ற தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என்று கூறி பாஜக அரசு தேர்தல் நடத்தவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமலுக்கு வந்தால் பாஜக இதே சேட்டையை பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளும். தங்களின் அரசியல் சுயலாபத்திற்காகவும், பிறரை பழிவாங்கவும் சட்டமன்ற தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் வரும் 2029ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது, சூழல் சரியில்லை என கூறி மக்களவைக்கும் மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. பின்னர் அடுத்த 6 மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று புதிய அரசு அமைகிறது எனில் அந்த அரசின் பதவிக்காலம் 4.5 ஆண்டு காலம் தான்.

தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் - என்.கே.மூர்த்தி

இதேபோல், 2026 முதல் 2029 வரை 3 ஆண்டுகள் மட்டும் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் எனில் சட்டப்பேரவையின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்கும் விதமாக அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்பது நாட்டை நாட்டை அதிபர் ஆட்சி முறையை நோக்கி கொண்டு செல்வதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆன்மாவே கூட்டாட்சி தத்துவம் தான். ஒவ்வொரு மாநிலத்திற்கும்  எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், உரிமைகள், கலச்சாரம், பண்பாடு என அனைத்தும் வேறுபடுகிறது. அப்படி இருக்கும்போது, நீங்கள் நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக நடத்தப்போகிறோம் என தெரிவித்து, மோடியை போன்ற ஒரு தலைவர் வந்து பிரச்சாரம் செய்தால் என்னவாகும். அவர் ஸ்டாலின் செய்த தவறு சீமான் சொல்லும்போது எடுபடுமா? எடப்பாடி சொல்லிக்காட்டும்போது எடுபடுமா? ஸ்டாலின் தனது ஆட்சியில் செய்த சாதனைகளை சொன்னால் தான் எடுபடுமா?. மோடி நேராக வருவார். இந்திரா என்ன செய்தார் தெரியுமா?, நேரு என்ன செய்தார் தெரியுமா? எல்லையில் என்ன நடக்கிறது தெரியுமா? என்பார். இதனால் உள்ளுர் பிரச்சினைகள் அனைத்தும் மழுங்கடிக்கப்படும். அந்த உரிமைக்கான குரல் எழவே எழாது. மோடி புலிப்பாய்ச்சலில் பாய்வார். இங்கே பூனை ஆகிவிடுவார்கள்.

கலைஞர் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்தார் என்கிறார்கள். அது அவரது பெருந்தன்மை. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை சந்திக்க சம்மதித்தார். ஆனால் அவர் திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் மக்களவை தேர்தல் வந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திப்பேன் என்று கூறினாரா?. நீங்கள் கொண்டுவர விரும்புகிற சர்வாதிகாரத்திற்கு கலைஞரு துணைக்கு அழைக்காதீர்கள். அதுவும் தவறாக அழைக்காதீர்கள். கலைஞர் இருந்த சூழலுக்கு அதனை சொன்னார். அப்போது அமலாக்கத்துறை என்ற ஒன்று இருந்ததா? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு சிபிஐ இப்படி சென்றதா?  வருமான வரித்துறை ஒவ்வொருவாக பிடித்து உள்ளே போட்டதா? 1951 முதல் 1967 வரை நாட்டில் இந்த பழிவாங்கல் அரசியல் இருந்ததா?. இன்று பாஜகவை பார்த்து கேட்கிறோம். நாளை காங்கிரஸ் வந்தாலும் இந்த அநியாயம் செய்யும். இப்படிப்பட்ட சூழலில் அதிகாரத்தை மத்தியில் ஆளுகின்ற ஒரு கட்சியிடம் கொடுப்பது சரிதானா.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் எழுப்பலாமா? என கேள்வி கேட்பார்கள். அந்த தேர்தல் ஆணையத்தை உறுப்படாமல் செய்தது மோடி அரசுதான். தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருந்த நிலையில், அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக பிரதமரால் நியமிக்கப்படும் மூத்த அமைச்சர் என்று மாற்றம் கொண்டுவந்தனர். அரசுக்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டதால் பிரதமர் தான் நினைத்த நபரை தேர்தல் ஆணையராக கொண்டுவர முடியும். இந்த அரசியல் சட்டத்திருத்தத்திற்கு உச்சநீதிமன்றத்திலேயே சரிதான் என தீர்ப்பும் வாங்கினார். அந்த பாஜக தான் இன்று தேர்தல் ஆணையத்திற்கு இவ்வளவு பெரிய அதிகாரத்தை வழங்குகின்றது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த குழுவில் ஆளுங்கட்சியினர் பெரும்பான்மையாக உள்ளதால் இந்த சட்டத்திற்கு ஆதரவாகவே முடிவு வெளியாகும். ஆனால் கடவுள் கொடுத்த வரமாக நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 3ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லை. இதுதான் ஜனநாயகத்தை காக்கப்போகிறது. மக்களவையில் 3ல் 2 பங்கிற்கு 60 இடங்களும், மாநிலங்களவையில் 40 இடங்களும் தேவை. எதார்த்த நிலை தெரிந்தும் ஏன் கொண்டுவந்தனர் என்றால் இந்த கருத்தியலை வைத்து மக்களிடம் எடுத்துச் சொல்லலாம். அடுத்த கூட்டத்தொடரில் தான் இந்த சட்டம் வாக்கெடுப்புக்கு வரும். அதற்குள்ளாக சட்ட விதிகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் சிலபேரை உருட்டி மிரட்டி விடலாம் என்று நினைக்கலா. அப்போதும் தேவையான இடங்களை பெற முடியாது. குறைந்தபட்சம் இந்த சட்டம் நிறைவேற 60 சதவீத வாய்ப்பு இல்லை.

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். எந்த ஒரு விவகாரத்திலும் மற்றவர்களை விட ஆழ்ந்து சிந்தித்து அறிக்கை வெளியிடுவதில் பாமக நிறுவனர் ராமதாஸ் முதன்மையானவர். அவர் இது குறித்து சிந்திக்க வேண்டும். இன்று நாம் கூட்டணியில் இருக்கிறோம். அதற்காக ஆதரிக்கிறோம் என இருக்கக்கூடாது. சர்வாதிகாரத்தை எதிர்காலத்தில் நிலை நிறுத்துவதற்கான முயற்சி தொடக்கப்புள்ளி என்பதை ராமதாஸ் சிந்தித்து பார்க்க வேண்டும். அரசியல் காரணங்கள் எல்லாம் கொஞ்சம் புறந்தள்ளி வைக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து 2018ல் விவாதம் வந்தபோது, எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை. தற்போது அதனை ஏற்பதாக அறிவித்துள்ளார். காரணம் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால் இருக்கலாம். இந்த விவகாரத்தை தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக விளையாட்டுத்தனமாக அணுகுகிறது.  எடப்பாடி பழனிசாமி, அரசியல் காரணங்கள் எல்லாம் கொஞ்சம் புறந்தள்ளி வைத்துவிட்டு சற்று சிந்திக்க வேண்டும். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் வந்தால் நாம் தமிழர் கட்சி, தவெக, மக்கள் நீதி மய்யம் போன்ற சிறிய கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டு அமெரிக்காவை போல இரு கட்சி ஆட்சி முறை வரும். பின்னர் அது சர்வாதிகார ஒரு கட்சி ஆட்சி முறைக்கு கொண்டுசெல்லும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ