நடிகை சாய் பல்லவி தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று அமரன் எனும் திரைப்படம் வெளியானது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த சிவகார்த்திகேயனுக்கு நிகராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை வென்றார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் திரையிடப்பட்டு பரிசுகளும் பெற்றது. அதன்படி அமரன் திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதினை வென்றுள்ளது. அதே சமயம் இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பேசிய சாய் பல்லவி, “அமரன் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு ராஜ்குமார் தான் காரணம். இந்த படம் வெளியான பிறகு கடந்த சில நாட்களாக அதிக அளவிலான அன்பை பெற்று வருகிறேன். ரசிகர்களுக்கு நன்றி” என்று பேசினார்.
அதேசமயம் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ், கங்குவா படத்திற்கு எழுந்த விமர்சனங்கள் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “முன்பெல்லாம் நாயகர்கள் பெயரைச் சொல்லி படம் தொடர்பாக பேசுவார்கள். ஆனால் தற்போது வெற்றிமாறன், பாலா, பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் படம் என இயக்குனர்கள் உயர்ந்த நடிகர்களுக்கு சமமாக தங்களை நிரூபித்துக் காட்டி இருக்கின்றனர். இருப்பினும் சமீபத்தில் கங்குவா படத்திற்கு எழுந்த விமர்சனங்கள் என்னை மிகவும் பாதித்தது. தவறான எண்ணத்திற்கு யாரும் கஷ்டப்பட மாட்டார்கள். படம் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே படத்தைப் பற்றி தவறாக பேசி படத்திற்கு யாரையும் வரவிடாத அளவிற்கு செய்து விட்டனர். படத்தைப் பார்த்து படம் நன்றாக உள்ளதா என்பதை ரசிகர்கள் முடிவு செய்ய வேண்டும். மீடியா, கையில் கிடைத்தவுடன் தவறான ஆட்கள் அதனை பயன்படுத்திக்கொண்டு படத்தை மோசமாக விமர்சிக்கின்றனர்” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.