சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது குறித்து இந்து அறநிலை துறை தாக்கல் செய்த ஆதாரங்களில் சென்னை உயர்நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.
அப்போது நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை பொது தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து, பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது.
கோவிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலங்கள் தீட்சிதர்களால் விற்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அறநிலையத் துறை, 20 ஏக்கர் விற்பனை குறித்து மட்டும் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் பொது தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை மறுத்த அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், ஸ்வாதின உரிமை பெற்றவர் எழுதிய உயிலின் அடிப்படையில், குறிப்பிட்ட தீட்சிதர், நிலத்தை விற்பனை செய்துள்ளதாகவும், நிலத்தின் பட்டா இன்னும் கோவிலின் பெயரிலேயே இருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு பொது தீட்சிதர்கள் விற்பனை செய்தது தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூடுதல் ஆதாரங்களை ஆன்லைனில் துறை தாக்கல் செய்யலாம் என அனுமதி அளித்தனர். இந்து அறநிலை துறை தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளதால் அதற்கு திருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பத்திர பதிவுத்துறையிடம் விசாரணை நடத்தவும் அனுமதி அளித்துள்ளனர்.
மேலும் கோவிலின் வரவு செலவு கணக்கு விவரங்கள் குறித்த வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு தரப்புக்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், கோவிலின் 101 கட்டளைகளில் எத்தனை கட்டளைகள் தற்போது செயல்படுகிறது, எத்தனை கட்டளைகள் செயல்படவில்லை, கட்டளை தீட்சிதர்களின் பெயர்- முகவரி உள்ளிட்ட விபரங்களை சேகரித்து தாக்கல் செய்யும்படி பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணைய
தள்ளி வைத்தனர்.