கல்லூரி மாணவி சௌமியா உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிடக் கோரி சௌமியாவின் தந்தை தாக்கல் செய்த மனு
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்வாப் டெஸ்ட் எடுக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். தடைய அறிவியல் துறையின் பேராசிரியர் கார்த்திகாதேவி, தடைய அறிவியல் துறையின் மருத்துவர் சண்முகம் ஆகியோர் விதிகளுக்கு உட்பட்டு ஸ்வாப் டெஸ்ட் எடுப்பதோடு, சௌமியாவின் உடல் நிலை குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும். – உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் சௌமியா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வந்தார். சௌமியா காணாமல் போன நிலையில், 27ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக அவர் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகவும், பாலியல் வன்புணர்வு செய்து அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதால், சௌமியாவின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிடக் கோரி சௌமியாவின் தந்தை மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் ஜனவரி 2ஆம் தேதி மாலை ஸ்வாப் டெஸ்ட் எடுப்பதற்காக ஆஜராகுமாறு மனுதாரருக்கு அழைப்பு வந்துள்ளது. மனுதாரர் வழக்கிற்காக மதுரையில் இருந்ததால் அவரால் அங்கு செல்ல இயலவில்லை.
அரசு தரப்பில், “வழக்கு விசாரணை முறையாக சென்று கொண்டிருப்பதாகவும், ரசாயன சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
ஆகவே மனுதாரர் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்வாப் டெஸ்ட் எடுக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். தடைய அறிவியல் துறையின் பேராசிரியர் கார்த்திகாதேவி தடை, அறிவியல் துறையின் மருத்துவர் சண்முகம் ஆகியோர் விதிகளுக்கு உட்பட்டு ஸ்வாப் டெஸ்ட் எடுப்பதோடு, சௌமியாவின் உடல் நிலை குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். ஸ்வாப் டெஸ்ட் முடிந்த பின்னர் மனுதாரர் சௌமியாவில் உடலை பெற்று இறுதி மரியாதை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.